வாஷிங்டன்: உலகில் பல போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த தனக்கு பாகிஸ்தான் – ஆப்கனிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது எளிதானதே என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு ட்ரம்ப், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது அவர், “பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதை நான் புரிந்து வைத்திருக்கிறேன். அந்த மோதலை தீர்க்க விரும்பினால், அது எனக்கு எளிதானதே. இதற்கிடையில் நான் அமெரிக்காவை நடத்த வேண்டும். ஆனாலும், போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதை நான் விரும்புகிறேன்.
ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? மக்கள் கொல்லப்படுவதில் இருந்து தடுக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காத்திருக்கிறேன். நான் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். ருவாண்டோ – காங்கோவுக்கு இடையிலான போராகட்டும், இந்தியா – பாகிஸ்தான் போராகாட்டும் நான்தான் அவற்றை தீர்த்து வைத்தேன்.
ஒவ்வொருமுறை போர்களை நான் தீர்த்து வைக்கும்போதும், அடுத்த போரை நீங்கள் தீர்த்துவைத்துவிட்டால் உங்களுக்குத் தான் நோபல் பரிசு என அவர்கள் கூறுவார்கள். எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் அதைப் பெற்றுள்ளார். அவர் யார் என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், அவர் ஒரு நல்ல பெண்மணி, தாராளமனப்பான்மை கொண்டவர். எனக்கு அதுபற்றி எல்லாம் கவலை இல்லை. உயிர்களைக் காப்பாற்றுவதில் மட்டுமே எனக்கு அக்கறை உள்ளது.” என தெரிவித்தார்.
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. அவர் தனது ஏற்புரையில், இந்த விருதை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.