புதுடெல்லி: பிஹார் மாநில சட்டப் பேரவைக்கு வரும் நவம்பர் 6, 11-ம் தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என். சேஷன் இருந்தபோது பர்தா அணிந்து வரும் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் தனிப்பிரிவு ஏற்படுத்த உத்தரவிட்டார்.
அவரைப் பின்பற்றி பிஹார் தேர்தலிலும் அதுபோன்ற தனிப்பிரிவுகளை ஏற்படுத்துமாறு தலைமைத் தேர்தல் ஆணையர், பிஹார் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் அதிக அளவில் முஸ்லிம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்கு வசதியாக இந்த ஏற்பாடுகள் நடைபெறவுள்ளன.
அதிக அளவில் முஸ்லிம் பெண் வாக்காளர் இருக்கும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பெண் தேர்தல் அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், பெண்களுக்கு என தனி வாக்குச்சாவடிகள் இருக்கும் பகுதிகளிலும் கூடுதல் பெண் ஊழியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.