புதுடெல்லி: பஞ்சாப் டிஐஜி ஹர்சரண்சிங் புல்லர் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில், ரூ.7.5 கோடி ரொக்கம், மெர்சிடஸ் பென்ஸ், ஆடி கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஞ்சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆகாஷ் பட்டா மீது குற்ற வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த வழக்கை நீக்குவதற்காக பஞ்சாப் ரோபர் சரக டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர் பேரம் பேசியுள்ளார்.
அவர் கூறியபடி கிருஷ்ணா என்பவர் ஆகாஷ் பட்டாவை தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் ஆகாஷ் பட்டா புகார் அளித்தார். இதையடுத்து கிருஷ்ணாவின் போனை சிபிஐ அதிகாரிகள் இடைமறித்து கேட்டதில், ரூ.8 லட்சம் பணம் தரவில்லை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத மாமூல் பணமும் வழங்கப்படவில்லை என கிருஷ்ணா கூறியுள்ளார்.
இதையடுத்து கிருஷ்ணாவை பிடிக்க சிபிஐ அதிகாரிகள் பொறி வைத்தனர். அவரை சண்டிகர் வரச்சொல்லி ரூ.8 லட்சம் பணத்தை வழங்கும்படி ஆகாஷ் பட்டாவிடம் சிபிஐ அதிகாரிகள் கூறினர். கிருஷ்ணா ரூ.8 லட்சம் பணத்தை பெற்றவுடன், டிஐஜி ஹர்சரண் சிங்குக்கு போன் செய்து ஆகாஷ் பட்டாவிடம் கொடுத்துள்ளார். இருவரையும் மொஹாலியில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரும்படி ஹர்சரண் சிங் கூறியுள்ளார். சிபிஐ அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்று டிஐஜி அலுவலகத்திலேயே ஹர்சரண் சிங் மற்றும் கிருஷ்ணாவை கைது செய்தனர்.
இதையடுத்து, ஹர்சரண் சிங்குக்கு சொந்தமாக ரோபர், மொஹாலி, சண்டிகரில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ரூ.7.5 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்க நகை, 50 சொத்து ஆவணங்கள், மெர்சிடஸ் பென்ஸ், ஆடி கார்களின் சாவிகள், 26 விலை உயர்ந்த கைகடிகாரங்கள், வங்கி லாக்கர் சாவிகள், 40 பாட்டில் வெளிநாட்டு மது, இரட்டை குழல் துப்பாக்கி, பிஸ்டல், ரிவால்வர்,
ஏர் கன் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணா வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.21 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஹர்சரண்சிங் புல்லர், பஞ்சாப் முன்னாள் டிஜிபி எம்எஸ் புல்லரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.