“2026 தேர்தலில் விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சி" – டிடிவி தினகரன் சந்தேகம்

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க அந்தக் கூட்டணிக்குள் வந்ததும் எடப்பாடி பழனிசாமியை 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எதிராக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார்.

தற்போதுவரை இந்தக் கூட்டணியில் இணையப்போகிறார் என்பது பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்
விஜய்

இவ்வாறிருக்க, கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் பா.ஜ.க கூட்டணியில் இணையப்போவதாக ஒருபக்கம் பேச்சுக்கள் அடிபட்டது.

இன்னொருபக்கம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருபடி மேலே சென்று தனது சுற்றுப்பயண கூட்டமொன்றில் த.வெ.க கொடி பறந்ததைக் காட்டி, “பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்றெல்லாம் பேசினார்.

இருப்பினும், கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய் மௌனமாக இருப்பதால் மேற்குறிப்பிட்டவையெல்லாம் வெற்றுப்பேச்சாக உலா வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக டி.டி.வி. தினகரன் கூறியிருக்கிறார்.

செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், “நாங்கள் கூட்டணிக்கு செல்கிறோமா அல்லது எங்கள் தலைமையில் கூட்டணி அமைகிறதா என்பதெல்லாம் பொங்கல் நேரத்தில் தெரியவரும்.

அதுவொரு புதிய கட்சி (த.வெ.க) எங்களை விமர்சிப்பவர்களை நாங்கள் விமர்சிக்காமல் விடமாட்டோம். அதேநேரத்தில் இன்னொரு கட்சியை, அதன் தலைவரை தேவையில்லாமல் விமர்சிப்பது எனக்கு பழக்கமல்ல.

எனக்குத் தெரிந்தவரை விஜய் தலைமையில் தேர்தலில் ஒரு கூட்டணி போட்டியிட வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன். அது யார் கூட என்று போகப்போகத்தான் தெரியும்.

தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி இருக்கும். திமுக தலைமையிலான கூட்டணி, என்.டி.ஏ கூட்டணி, விஜய் தலைமையிலான கூட்டணி, தனித்து நிற்கும் சீமான் என நான்கு முனைப் போட்டி உருவாகும்.

டிடிவி தினகரன் - தவெக விஜய்
டிடிவி தினகரன் – தவெக விஜய்

இதைத்தாண்டி எதிர்பாராத கூட்டணி உருவாவதற்கும் வாய்ப்பிருக்கிறது. பிள்ளையார் போட்டாச்சு, பழனிசாமி கட்சிக்காரர்களே கொடியை அசைத்ததெல்லாம் பார்க்கும்போது, தேர்தலில் விஜய் தலைமையை ஏற்றுக்கொள்ள பழனிசாமி முயற்சி செய்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது” என்றார்.

மேலும், ஆணவப்படுகொலைகளைத் தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என்றும், அதன் பரிந்துரை அடிப்படையில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறித்து, “தமிழ்நாட்டில் என்னதான் கல்வி வளர்ந்திருந்தாலும், பெரியார் போன்ற தலைவர்களின் எண்ணங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் ஆணவப்படுகொலைகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.

அதற்கெதிராக நீதிபதி தலைமையில் குழு அமைத்து சட்டம் இயற்றப்படும் என்பது வரவேற்கத்தக்கது” என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.