"MGR-க்கு பிறகு கூர்மையான வாள்; ஆனால் கையாள அண்ணா போன்ற போர்வீரன் இல்லை" – இயக்குநர் அமீர் சூசகம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான `பைசன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.

விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் வரவேற்பை இப்படம் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் அமீர் மதுரையில் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், “இதை நான் வெறும் சினிமாவாகக் கடந்து போகவில்லை. நம் சமூகத்தில் இருக்கிற பிரச்னைகளைப் பேசுகிற படமாக இருக்கு.

Bison \ பைசன்
Bison \ பைசன்

அது சரியாக வந்திருக்கிறது. ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதைப் பார்க்கிறேன்.

எந்தச் சமூகத்தாரும் குறை சொல்லாத அளவுக்குப் படம் அமைந்திருப்பதை மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, “அரசியலில் நடிகர்கள் வரும்போது அவர்களுக்கு ஆதரவாக நடிகர்கள் வருவார்களா?” என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமீர், “அப்படியெல்லாம் வரமாட்டார்கள். எம்.ஜி.ஆர் வரும்போது அவர் பின்னாடி எல்லா நடிகர்களும் வரவில்லை. விஜயகாந்த் வரும்போது அப்படி யாரும் வரவில்லை.

அவரவர் தனியாக வந்து அவரவர் அடையாளங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். நடிகர்களும் சமூகத்தில் ஓர் அங்கம்தான்.

பெரும்பான்மையான மக்களின் அன்பைப் பெற்றவர்கள். அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நாம் சொல்லக்கூடாது.

அமீர்
அமீர்

லட்சோப லட்ச மக்களின் அன்பைப் பெற்ற எம்.ஜி.ஆரை அண்ணா ஒரு கருவியாக எடுத்துக்கொண்டார். அந்த வாளை எடுத்துக்கொண்டு அண்ணா என்ற போர்வீரன் ரொம்ப சரியாகப் பயன்படுத்தியதாக நான் பார்க்கிறேன்.

எம்.ஜி.ஆர் மூலமாக திராவிட சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார். அந்த வீரன் சரியாக இருந்தார், அந்த வாளும் சரியாகப் பயன்படுத்தப்பட்டது.

அதேபோல ஒரு வாள் இப்போது கிளம்பியிருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு கூர்மையான ஆயுதம் கிளம்பியிருக்கிறது.

ஆனால், அந்த வாளைப் பயன்படுத்துவதற்கான சரியான போர்வீரன் இல்லை என்பது என்னுடைய கருத்து. அந்த வாள் நல்லவர்கள் கையில் கிடைத்தால் நன்றாகப் பயன்படும். கெட்டவர்கள் கையில் கிடைத்தால் தவறாகத்தான் போகும்.

அந்தப் பலம் வாய்ந்த வாளை யார் பயன்படுத்தப்போகிறார்கள், நல்லவர்களா கெட்டவர்களா என்பதை 2026 தேர்தல் முடிவு செய்யும் என்று நினைக்கிறேன்” என்று அமீர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.