ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போது தங்களது எதிர்கால அணியை கட்டமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அணியின் மூத்த தூண்களான மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்த சீசனுடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், அவர்களுக்கான மாற்று வீரர்களை அடையாளம் காணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்த சூழலில், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை பிடிப்பதற்காக, 25 வயது இளம் இந்திய வீரர் ஒருவரை தோனி தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add Zee News as a Preferred Source

அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், அடுத்த 10 ஆண்டுகளை கருத்தில் கொண்டு ஒரு வலிமையான அணியை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 32 வயதுக்கு மேற்பட்ட வீரர்களை ஏலத்தில் எடுப்பதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஆயுஷ் மாத்ரே, டிவோல்ட் பிரேவிஸ் போன்ற வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த நீண்ட கால திட்டத்தின் மிக முக்கிய அங்கமாக, இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ஜொலிக்கும் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஜடேஜாவை போன்ற தலைசிறந்த வீரர்களாக வளர்த்தெடுப்பதே சிஎஸ்கே-வின் இலக்காக உள்ளது.
யார் இந்த ஹர்ஷ் தியாகி?
மகேந்திர சிங் தோனியால் அடையாளம் காணப்பட்ட அந்த இளம் வீரரின் பெயர் ஹர்ஷ் தியாகி. டெல்லியை சேர்ந்த இவர், ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை பந்துவீச்சாளர் ஆவார். உள்ளூர் கிரிக்கெட்டில் ரயில்வேஸ் அணிக்காக விளையாடி வரும் தியாகி, தனது ஆல்-ரவுண்டர் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதுவரை 41 உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 27 இன்னிங்ஸ்களில் 134.87 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 321 ரன்கள் எடுத்துள்ளார். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், 13 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றுள்ளார். இது நெருக்கடியான நேரங்களில் அணியை வழிநடத்தும் அவரது திறனை வெளிப்படுத்துகிறது. பந்துவீச்சிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். 40 இன்னிங்ஸ்களில் பந்துவீசி, ஓவருக்கு 7.03 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனமாக பந்துவீசியுள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் வெளிப்படுத்திய இந்த அபார திறமையே, தோனியின் பார்வை இவர் மீது விழ முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சிஎஸ்கே-வின் அடுத்தகட்ட நகர்வு
ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில் ஹர்ஷ் தியாகி தனது பெயரை பதிவு செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக, அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அகடமிக்கு அழைத்து, அவரது திறமைகளை நேரில் சோதிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தியாகியை அடிப்படை விலையிலேயே ஏலத்தில் எடுக்க முடியும் என்பதால், இது சிஎஸ்கே அணிக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. சரியான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மூலம், ஹர்ஷ் தியாகி அடுத்த சில ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரராக உருவெடுப்பார் என தோனி நம்புவதாகக் கூறப்படுகிறது.
தோனியின் ஓய்வு எப்போது?
ஐபிஎல் 19-வது சீசனுக்கு முன்பாக தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் தனது கடைசி போட்டியில் விளையாட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்திருந்ததால், 19-வது சீசனின் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஒருபுறம் மூத்த வீரர்கள் விடைபெற தயாராகும் அதே வேளையில், மறுபுறம் ஹர்ஷ் தியாகி போன்ற இளம் வீரர்களை கொண்டு எதிர்காலத்தை வலுப்படுத்த சிஎஸ்கே எடுக்கும் இந்த முயற்சி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
About the Author
RK Spark