ஜெருசலேம்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 68 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த 10ம் தேதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஹமாஸ் தங்கள் வசம் உயிருடன் இருந்த 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. மேலும், கொல்லப்பட்ட 28 பணய கைதிகளில் பெரும்பாலானோரின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது.
அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தப்படி கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்கள் அனைத்தையும் கடந்த 13ம் தேதி ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனாலும், இன்னும் சில பணய கைதிகளின் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்படவில்லை.
அதேபோல், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் பகுதியாக ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும். ஆனால், ஆயுதங்களை கைவிட ஹமாஸ் மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேவேளை, ஒப்பந்தப்படி காசாவுக்கு அதிக அளவிலான நிவாரண பொருட்களை அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். ஆனால், நிவாரண பொருட்கள் அனுப்புவதை இஸ்ரேல் தடுப்பதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டி வருகிறது
இந்நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் இடையே இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. காசா முனையில் எகிப்து எல்லையில் உள்ள ரபா சோதனைச்சாவடியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, ரபா பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் மீண்டும் தொடங்கியுள்ளதால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.