வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தினேன் என மீண்டும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பாக்ஸ் நியூஸ் இதழுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, வரி விதிப்புகளால், 2 அணு ஆயுத நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்தின. ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால், அணு ஆயுத போர் ஒன்று ஏற்பட்டிருக்கும். ஆனால், அது தடுத்து நிறுத்தப்பட்டது என கூறினார்.
லட்சக்கணக்கான மக்களை பாதுகாத்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னை புகழ்ந்து பேசினார் என்றும் டிரம்ப் அப்போது கூறினார். அவர் தொடர்ந்து கூறும்போது, 2 நாடுகள் மீதும் 200 சதவீத வரிகளை விதிக்க போகிறேன். இதனை எதிர்கொள்வது என்பது உங்களால் முடியாதது. உங்களுடன் நாங்கள் வர்த்தகமும் செய்ய போவதில்லை என 2 நாடுகளிடமும் நான் கூறினேன். இதன்பின்னர், 24 மணிநேரத்தில் நான் போரை நிறுத்தி விட்டேன் என பெருமிதத்துடன் கூறினார்.
கடந்த மே 10-ந்தேதி முதன்முதலாக சமூக ஊடகத்தில் டிரம்ப், இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடவடிக்கையால், இந்தியாவும் பாகிஸ்தானும் முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய ஒப்பு கொண்டன என பதிவிட்டார். தொடர்ந்து பலமுறை இதனை கூறி வருகிறார். பல போர்களை நிறுத்தியதற்காக தனக்கு நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்றும் இடையிடையே கூறி வருகிறார்.
எனினும், டிரம்பின் இந்த பேச்சை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறி வருகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.
இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவை தரைமட்டம் ஆக்கப்பட்டன.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.
ஆனால், போரை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அவர் கூறினார். இதில், எந்த நாட்டின் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்ற விவரங்களை தெளிவாக அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில், இந்த எண்ணிக்கையை அதிகரித்து அவர் கூறியிருக்கிறார்.