மும்பை,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 21வது லீக் ஆட்டத்தில் இலங்கை , வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்ற. நவி மும்பையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து தொடக்க வீராங்கனைகளாக விஷ்மி குணரத்னே, கேப்டன் ஷமாரி அட்டபட்டு களமிறங்கினர். விஷ்மி முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஹாசினியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷமாரி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷமாரி 46 ரன்களிலும், சிறப்பாக ஆடிய ஹாசினி 85 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீராங்கனைகள் வங்காளதேச பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இலங்கை 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேச தரப்பில் அந்த அணியின் ஷர்னோ அக்தர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கி விளையாடி வருகிறது.