சென்னை: அமேசான் நிறுவனத்தின் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உலக முடங்கிய நிலையில் தற்போது அது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் அமேசான் வெப் சர்வீசஸ் சேவையை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. சமூக வலைதளம், கேமிங் தளங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள், நிதி சேவை சார்ந்த செயலிகள் என பல்வேறு ஆன்லைன் தளங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. ஸ்னாப்சேட், Venmo, பின்ட்ரஸ்ட், ஆப்பிள் டிவி, ரெட்-இட், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில் திங்கட்கிழமை அன்று அமேசான் வெப் சர்வீசஸ் சேவை உலக அளவில் முடங்கியதால் அதை பயன்படுத்தி வரும் ஆன்லைன் தள நிறுவனங்களின் சேவையும் முடங்கின. இதற்கு டிஎன்எஸ்-ல் ஏற்பட்ட சிக்கல் தான் காரணம் என அமேசான் தெரிவித்தது. இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது இந்த முடக்கத்தை தங்களது பொறியாளர்கள் சீர் செய்துள்ளதாகவும். இதனால் இயல்பு நிலைக்கு அமேசான் வெப் சர்வீசஸ் இயக்கம் திரும்பி உள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது. இதன் கிளவுட் கம்யூட்டிங் சேவையை உலக அளவில் பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கிளவுட் கம்யூட்டிங்? – ‘கிளவுட் கம்யூட்டிங்’ உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப வளங்களில் மிகவும் முக்கியமானது. தொழில்நுட்ப உலகில் சாம்ராட்களாக விளங்கும் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், அலிபாபா (சீனா), ஐபிஎம் என பல்வேறு நிறுவனங்கள் இந்த கிளவுட் கம்யூட்டிங் சேவைகளை வழங்கி வருகின்றன. இன்றைய தொழில்நுட்ப உலகம் இதனை சார்ந்தே இயங்கி வருகின்றன. ஸ்டோரேஜ் தொடங்கி டேட்டா பேஸ், நெட்வொர்க்கிங் என பல்வேறு விதமான சேவைகளை பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப இதில் கிடைக்கிறது.
இதன்மூலம் நிறுவனங்கள் தங்களது மொபைல் அப்ளிகேஷன்கள், வலைதளங்கள் முதலானவற்றை எளிதாக கட்டமைத்து, நிர்வகிக்க முடியும். சர்வர்களை நிர்வகிப்பதில் எந்தவித சிக்கலும் இன்றி இதனை செய்ய இந்த கிளவுட் சேவை நிறுவனங்கள் உதவுகின்றன.