பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இன்று அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது . சமீபத்திய தொடர் தோல்விகளை தொடர்ந்து, பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் பாகிஸ்தான் ஒருநாள் அணிக்கு நியமிக்கப்படும் மூன்றாவது கேப்டன் ஷஹீன் அப்ரிடி ஆவார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழலை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
Add Zee News as a Preferred Source
ரிஸ்வான் நீக்கத்திற்கான காரணம் என்ன?
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பாபர் அசாம் பதவி விலகியதை தொடர்ந்து, முகமது ரிஸ்வான் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் சில வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தது. குறிப்பாக, 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவை 3-0 என ஒயிட்வாஷ் செய்ததும், ஜிம்பாப்வே தொடரை வென்றதும் ரிஸ்வானின் கேப்டன்சிக்கு கிடைத்த வெற்றிகளாக பார்க்கப்பட்டன.
ஆனால், 2025-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு சோதனை காலமாக அமைந்தது. சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. அதைவிட முக்கியமாக, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம்பெற்றிருந்த குழுவில் கடைசி இடத்தை பிடித்து, முதல் சுற்றிலேயே வெளியேறியது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இறுதியாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்து, 34 ஆண்டுகளில் முதல் முறையாக கரீபியன் மண்ணில் தொடரை இழந்தது. இந்த தொடர் தோல்வியே ரிஸ்வானின் கேப்டன் பதவி பறிபோக முக்கிய காரணமாக அமைந்தது.
புதிய கேப்டன் ஷஹீன் அப்ரிடி
25 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் அப்ரிடி, பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இதுவரை 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 131 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இதற்கு முன், 2024-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தியுள்ளார். இருப்பினும், அந்த தொடரில் அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழு, வெள்ளைப்பந்து போட்டிகளின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் உயர் செயல்திறன் இயக்குனர் அகிப் ஜாவேத் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஷஹீன் அப்ரிடியின் தலைமையிலான முதல் தொடர், நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடராகும். இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் ஃபைசலாபாத்தில் நடைபெறவுள்ளன. பாகிஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு திருப்பி, அணியில் ஒரு நிலையான தலைமையை ஏற்படுத்துவாரா ஷஹீன் அப்ரிடி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
About the Author
RK Spark