பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். இதையடுத்து, வேட்பு மனுக்களை மீது தேர்தல் ஆணையம் இன்று பரீசிலனை மேற்கொண்டது.
இந்நிலையில், பீகார் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தலில் 1 ஆயிரத்து 314 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,
முதற்கட்ட தேர்தலில் போட்டியிட கடந்த 10 முதல் 17ம் தேதி வரை 1 ஆயிரத்து 690 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 315 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 61 பேர் வேட்பு மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, 1 ஆயிரத்து 314 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பீகாரில் முதற்கட்ட தேர்தலில் 1 ஆயிரத்து 314 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர்.
அதேவேளை, 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் விவரம் வரும் 24ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.