ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தற்போது 0–1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
Add Zee News as a Preferred Source
அந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க முடியாதது இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. அதேசமயம் பந்து வீச்சுத் துறையில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாததும் அணியின் சமநிலையை பாதித்ததாக மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்திருந்தார்.
அஸ்வின், இர்பான் கருத்து
அஸ்வின் கூறியதை ஒத்துப்போவதுபோல, முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது யூடியூப் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “குல்தீப் யாதவ் தற்போது ஆஸ்திரேலிய பேட்டிங் அணிக்கு பெரிய சவாலாக இருப்பார். அவரை அணியில் சேர்த்தால் நடுப்பகுதியில் விக்கெட்டுகள் வீழ்ச்சியடையும் வாய்ப்பு அதிகரிக்கும். நிதீஷ் ரெட்டி 7–8 ஓவர்கள் வீச முடிந்தவரை, குல்தீப்பை சேர்க்க இடமிருக்கும்” என கூறினார்.
அவர் மேலும், “இந்திய அணி தற்போது 8வது இடம் வரை பேட்டிங் திறனுள்ளவர்களை கொண்டிருக்க விரும்புகிறது. ஆனால் அப்படி அணியை அமைப்பது எளிதல்ல. குல்தீப்புடன் பந்துவீச்சிலும் வேறுபாடு கிடைக்கும். ஹர்ஷித் ராணாவை 8வது இடத்தில் பவுலராக வைத்துக்கொண்டால் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடலாம்” என்று கூறினார்.
கம்பீர் ஹர்ஷித் ராணாவுக்கு ஆதரவு
இத்துடன், 23 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை விமர்சிக்க வேண்டாம் என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருக்கு பயிற்சியாளரின் முழு நம்பிக்கை இருப்பதால், அவரை அணியில் இருந்து நீக்க வாய்ப்பு இல்லை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
அடுத்த போட்டி
இந்தியா – ஆஸ்திரேலியா தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்டில் நடைபெற உள்ளது. இந்திய அணி தொடரில் மீள குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின்னர்களை அணியில் சேர்த்து தந்திர மாற்றம் செய்யுமா என்ற கேள்வி இப்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
About the Author
R Balaji