சென்னை,
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இளம்வீரர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை அந்த அளவுக்கு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தாத அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் சமீபத்தில் விமர்சித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர், “தற்போது இந்திய அணியில் ஒரே ஒரு நிரந்தர வீரர்தான் இருக்கிறார். அவர் எதற்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சிலர் நன்றாக ஆடினாலும் அணியில் இடமில்லை. சிலர் சரியாக ஆடாவிட்டாலும் அணியில் இடம் கிடைக்கிறது. அணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் கம்பீருக்கு ஆமாம் சாமி போட வேண்டும் போல” என ஸ்ரீகாந்த் கூறியிருந்தார்.
ஸ்ரீகாந்தின் இந்த கருத்திற்கு பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர், “யூ-டியூப் சேனலுக்காக ஒரு இளம் வீரரைக் குறிவைப்பது வெட்கக்கேடானது” என ஸ்ரீகாந்த் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக சாடினார்.
கம்பீரின் கண்டனத்துக்கு பிறகு இந்த விவகாரத்தில் ஹர்ஷித் ராணாவுக்கு ஆதரவாக இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசி உள்ளார். அவர் தனது, ‘யூ-டியூப்’ சேனலில் யாரையும் நேரடியாக குறிப்பிடாமல், “விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதலாக மாறக்கூடாது. அது ஒரு வீரரின் தன்னம்பிக்கையை சிதைத்துவிடும். அவர்களுக்கும் ஒரு குடும்பம் உள்ளது” என்று கூறியிருந்தார்.
அஸ்வினின் இந்த அறிவுரைக்கு, ஸ்ரீகாந்தின் மகன் அனிருதா ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது “நான் அஸ்வினிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன், ஏன் ப்ரோ? நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம்?. இது கொஞ்சம் நியாயமற்றதாக தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒட்டுமொத்த பெங்களூரு அணி பந்துவீச்சு வரிசையையே கேலி செய்தபோது, நாங்கள் அதை ரசித்துச் சிரித்தோம்.
அப்போது, அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?. சீக்கா (ஸ்ரீகாந்த்) 1983-ல் லண்டன் லார்ட்ஸ் பால்கனியில் சிகரெட் பிடித்த காலத்திலிருந்தே அப்படித்தான். அவர் யாருக்கும் பயந்ததில்லை. அவர் மாறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார்.
இளம்வீரர் ஹர்ஷித் ராணா தேர்வு குறித்து ஸ்ரீகாந்த், கம்பீரை தொடர்ந்து தற்போது அஸ்வின், அனிருதா ஸ்ரீகாந்த் இடையே வார்த்தை மோதலை ஏற்படுத்தி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.