திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள், தந்தம், பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் பொருட்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், இந்த பொக்கிஷங்களுக்கான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படாததால், முறைகேடுகளுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என குருவாயூர் தேவசம் வாரியத்தின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
குருவாயூர் தேவசம் வாரியத்தின் புன்னத்தூர் கோட்டா சரணாலயத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டு அறிக்கையில் 522.86 கிலோ தந்தம் மற்றும் தந்தப் பொருட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்படி தந்தம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு ஒப்படைக்கப்படவில்லை என வனத்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.
கோயிலுக்குள் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தபோதும் அதில் பல குறைகள் உள்ளன. கோயில் உபயோகத்துக்காக பயன்படுத்தப்பட்ட தங்கம் வெள்ளி பொருட்களின் எடைகள் குறைவாக உள்ளன.
கோயிலில் இருந்த தங்க கிரீடம், வெள்ளி ஆபரணமாக மாற்றப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த 2.65 கிலோ வெள்ளி பாத்திரத்துக்கு பதில் 750 கிராம் எடையுள்ள பாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குருவாயூர் தேவசம் சட்டம் 1978 மற்றும் 1980-ம் ஆண்டு விதிமுறைகள் படி கோயில் பொக்கிஷங்கள் ஆண்டு தோறும் சரிபார்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் அதுபோன்ற சரிபார்த்தல் நடவடிக்கை கடந்த 40 ஆண்டுகளாக நடைபெறவில்லை என தணிக்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 30-ம் தேதிக்குள் கோயில் பொக்கிஷங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேவசம் வாரிய ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பின்பற்றப்படவில்லை.