சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.
இரவு ராஜ்பவனில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்றார்.
அங்கிருந்து கார் மூலம் பம்பா சென்றடைந்தார். பம்பா விநாயகர் கோயிலில் வழிபட்டதுடன், அங்கு இருமுடி நிறைத்தார். ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டினார்கள்.
பம்பாவில் இருந்து பிரத்யேக வாகனத்தில் சுவாமி ஐயப்பன் சாலை வழியாக சன்னிதானத்தை அடைந்தார். ஜனாதிபதி வாகனத்தையும் சேர்த்து ஆறு வகனங்கள் சபரிமலை சென்றன.

சுவாமி ஐயப்பன் சாலையில் வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருமுடி கட்டுடன் பதினெட்டாம்படி ஏறிச் சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் வரவேற்றார்.
பின்னர் சன்னிதானத்தின் முன்பு சென்று ஐயப்ப சுவாமியை மனமுருகி வழிபட்டார். ஜனாதிபதி சுமந்து சென்ற இருமுடி கட்டுகளை சன்னிதானத்தில் சமர்ப்பித்தார். அத்துடன் பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டுகளை சமர்ப்பித்தனர்.
வழக்கமாக இருமுடி கட்டில் உள்ள நெய் மட்டுமே ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக கருவறைக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
அதே சமயம் ஜனாதிபதியின் இருமுடி கட்டுகள் கருவறைக்குள் எற்றுக்கொள்ளப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தீபாராதனையை ஜனாதிபதி தொட்டு வணங்கியதுடன், கோயிலை வலம் வந்து வணங்கினார். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு உகந்த கருப்பு ஆடையில் ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

தரிசனம் நிறைவுற்ற நிலையில், சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை 3 மணியளவில் பிரத்யேக வாகனத்தில் ஜனாதிபதி மீண்டும் பம்பா செல்கிறார்.
தொடர்ந்து திருவனந்தபுரம் செல்லும் அவர் வரும் 24-ம் தேதி வரை கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக கடந்த 17-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இன்று இரவு வரை நடை திறந்திருக்கும்.
ஜனாதிபதி திரெளபதி முர்மு தரிசனம் செய்வதை முன்னிட்டு இன்று பக்தர்கள் யாரும் சபரிமலையில் அனுமதிக்கப்படவில்லை. முன்பதிவு முற்றிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.