திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். 4 கால் நடைகள் உயிரிழந்தன. 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கனமழையும், சில நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழக – ஆந்திர எல்லை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வாணியம்பாடி அருகேயுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி அதிலிருந்து உபரிநீர் வெளியேறி பாலாறு வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டி 5 செ.மீ. அளவுக்கு உபரி நீர் வெளியேறி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாலாற்றங்கரை ஓரங்களில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க நீர்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் வருவாய் துறையினர் ஒலிபெருக்கி மூலம் பாலாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, ஆற்று பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர், கந்திலி, ஆலங்காயம், நாட்றம்பள்ளி, ஆம்பூர், மாதனூர் போன்ற பகுதிகளில் பல இடங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழை வெள்ளம் ஓடுகிறது. இதனால், பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் அடுத்த மாதனூர், வடபுதுப்பட்டு, உமராபாத், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாயந்ததால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை துறையினர், மின்வாரிய துறையினர் அந்தந்த பகுதிகளுக்கு சென்று மரம் அறுக்கும் இயந்திரங்கள் மூலம் சாலையில் விழுந்த மரங்களை அறுத்து அகற்றினர். மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது இங்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், பருவமழை காரணமாக நாட்றம்பள்ளி வட்டத்தைச் சேர்ந்த பெரியக்கா (72) என்பவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.
அதேபோல, 4 கால்நடைகள் பருவமழையால் உயிரிழந்தன. இதுவரை 16 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. பயிர் வகைகள் சேதம் தொடர்பாக வேளாண்மை துறையினர் கணக்கீடு செய்து வருகின்றனர். பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வருவாய் துறையினர் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கை பேரிடர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளன.
பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் இதுவரை 20 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் கண்காணிப்பில் உள்ளன” என்றனர்.