ராவல்பிண்டி,
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லாகூரில் நடந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 113.4 ஓவர்களில் 333 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சல்மான் ஆஹா 45 ரன்னிலும், சாத் ஷகீல் 66 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் கேஷவ் மகராஜ் 7 விக்கெட்டும், சிமோன் ஹார்மர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 68 ரன்களுடனும், கைல் வெர்ரைன் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணி 148 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 119.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 404 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக முத்துசாமி 89 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஆசிப் அப்ரிடி 6 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 71 ரன் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் இன்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 35 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி தற்போது வரை 23 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசாம் 49 ரன்னுடனும், முகமது ரிஸ்வான் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் சைமன் ஹார்மர் 3 விக்கெட் வீழ்த்தி உள்ளார். நாளை 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.