தென்காசி: தொடர் மழை எதிரொலியாக தென்காசி மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “வடகிழக்கு பருவ மழை கடந்த 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்த முறை வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து, எந்தெந்த பகுதிகளில் மழை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதோ அந்த பகுதி ஆட்சியர்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டு ள்ளார். தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இயல்பான மழை அளவு 16.60 செ.மீ. ஆகும். ஆனால், அக்டோபர் மாதத்தில் இதுவரை 23.75 செ.மீ. மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது.
மழைக்கு 20 வீடுகள் சேதம்: மழையால் 14 குடிசைகள், 6 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. அதற்கான நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப் பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையில் 5.65 ஹெக்டேர் , வேளாண்மைத் துறையில் 9.6 ஹெக்டேர் நிலங்கள் மழையால் பாதிக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சேத விவரங்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. உடனடியாக கணக்கெடுப்பு செய்து, ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு வரவும், அணைகள் நிரம்பியவுடன் உபரி நீரை உடனடியாக திறந்துவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கவும், மின் தடைகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப் பட்டுள்ளது. 40 இடங்களில் தற்காலிகமாக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
முதல்வர் வருகை தள்ளிவைப்பு: தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்தறை கட்டுப்பாட்டில் 543 குளங்கள், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப் பாட்டில் 414 குளங்கள் உள்ளன. இவற்றில் 25 சதவீத குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்துக்கு 24, 25-ம் தேதிகளில் வருகை தருவதாக இருந்த நிலையில், தொடர் மழையால் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் முதல்வர் வருகை தள்ளிப்போகிறது. மழை நின்றதும் முதல்வர் வரும் தேதி அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சென்று, மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள்” என்றார்.