தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிந்த பிறகு, இந்தியாவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த போட்டிகளுக்கு முன்னதாக இந்திய A அணி 4 நாட்கள் நடைபெறும் பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், மீண்டும் அணிக்கு திரும்புகிறார். தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு, நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source

காயத்திலிருந்து கம்பேக்
மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியின்போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸின் யார்க்கர் பந்து தாக்கியதில் ரிஷப் பந்த் காயமடைந்தார். அதன் பிறகு, அவர் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது முழு உடற்தகுதி பெற்று, மீண்டும் களமிறங்க தயாராகியுள்ளார். அவரது இந்த வருகை, இந்திய அணிக்கு பெரும் பலத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு பயிற்சி மையத்தில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும் இந்த அணியில் ருதுராஜ் கைகுவாட் இடம் பிடித்துள்ளார். சமீபத்திய ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக அவர் இடம் பிடித்துள்ளார். முதல் போட்டிக்கான அணியில் அவரது பெயர் இல்லை என்றாலும், 2வது போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அனுபவமும், இளமையும் கலந்த அணி
ரிஷப் பந்த் தலைமையிலான இந்த இந்திய ஏ அணியில் அனுபவ வீரர்களும், இளம் திறமையாளர்களும் இடம் பெற்றுள்ளனர். தமிழக வீரர் சாய் சுதர்சன் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் போட்டிக்கான அணியில் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் மற்றும் தமிழக வீரர் என். ஜெகதீசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டாவது போட்டிக்கான அணியில் மேலும் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சீனியர் வீரர்களான கே.எல். ராகுல், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், துருவ் ஜுரல், கலீல் அகமது போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தேசிய அணிக்கு திரும்ப முயற்சிக்கும் சீனியர் வீரர்களுக்கும், தேசிய அணியில் இடம்பிடிக்கக் காத்திருக்கும் இளம் வீரர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
முதல் போட்டிக்கான இந்திய ஏ அணி
ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), ஆயுஷ் மத்ரே, என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியான், மனவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரன்ஷ் ஜெயின்.
இரண்டாவது போட்டிக்கான இந்திய ஏ அணி
ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியான், மனவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
About the Author
RK Spark