நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் மிஞ்சியிருக்கும் ஒரு இடத்தைத் தங்களுக்கானதாக மாற்ற நியூசிலாந்தும் இந்தியாவும் இன்று (அக்டோபர் 23) மோதின.
இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமான இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சோபி டிவைன் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
இந்திய துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், பிரதிகா ராவலும் விக்கெட் விடக்கூடாது என்ற நோக்கில் மிகவும் நிதானமாக ஆடினர்.

பவர்பிளேயின் கடைசி ஓவரில் பிரதிகா ராவல் பவுண்டரி அடித்து 15 ரன்கள் தொட்டபோது தனது ஒருநாள் போட்டி கரியரில் 1,000 ரன்களைத் தொட்டார்.
25 வயதாகும் பிரதிகா ராவல் இப்போட்டிக்கு முன்பு வரை 22 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம், 7 அரைசதம் உட்பட 988 ரன்கள் அடித்திருந்தார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 1,000 ரன்களைத் தொட்ட வீராங்கனை என்ற சாதனை ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை லிண்ட்சே ரீலர் வசம் 37 வருடங்களாக (1988) இருந்த நிலையில், பிரதிகா ராவல் இன்று தனது 23-வது ஒருநாள் போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்றவாறு அந்தச் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
அதேசமயம், இந்தச் சாதனையோடு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 21-ம் நூற்றாண்டில் அதிதேவகமாக 1,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் பிரதிகா ராவல்.
ஒட்டுமொத்தமாக (இருபாலர்) ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (24), ஷிகர் தவான் (24) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.
(இந்திய ஆடவர் அணியின் தற்போதைய கேப்டன் சுப்மன் கில் 19 போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்து முதலிடத்தில் இருக்கிறார்).

இத்தனைச் சாதனைகளோடு நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கிய பிரதிகா ராவல், 122 பந்துகளில் சதமடித்து தனது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.
சதமடித்த பிறகும் அதிரடி காட்டிய பிரதிகா ராவல் 122 ரன்களில் அவுட்டானார். இதற்கிடையில், ஸ்மிருதி மந்தனாவும் 109 ரன்கள் அடித்து அவுட்டானார். இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனாவும் பிரதிகா ராவலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளமிட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெஸ்ட் இன்டீஸுக்கெதிரான தொடரில் அறிமுகமான பிரதிகா ராவல், தனது முதல் 8 போட்டிகளிலேயே ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடித்து 500 ரன்களைக் கடந்து மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 500 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.