பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி (மெகா கூட்டணி) என 2 பிரதான கூட்டணி கட்சிகளும், பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளன. மும்முனை போட்டி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வந்தது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்தன.
இந்த நிலையில், இன்று பாட்னாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் வேட்பாளராக விஐபி கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சி தயங்கியதே கூட்டணியில் குழப்பம் உருவாக காரணம் என்று கூறப்பட்டது. தற்போது முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை தீர்ந்துள்ளதால், இந்தியா கூட்டணியில் நீடித்து வந்த குழப்பங்கள் தீரும் என்று தெரிகிறது.