திருவனந்தபுரம்,
கேரளாவில் வறுமையை முழுமையாக அகற்றுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு அம்மாநில அரசு சிறப்பு திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி கேரளாவில் 64 ஆயிரத்து 6 குடும்பங்கள் மிக மிக வறுமையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு புது வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.
1,300 பேருக்கு நிலம் வழங்கப்பட்டது. 5,700 பேருக்கு வீடுகளை புதுப்பிக்க தலா ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டது. மேலும் 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் மூலம் வறுமையில் இருந்த 64 ஆயிரம் குடும்பங்களும் தற்போது ஓரளவு வாழ்வாதாரத்தை பெற்று முன்னேறி உள்ளன.
இதையடுத்து தற்போது கேரளா வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாறி உள்ளது. இதை வருகிற 1-ந்தேதி திருவனந்த புரத்தில் விழா நடத்தி அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிக்க உள்ளார். இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.