புதுடெல்லி: அதானி குழுமத்துக்குப் பயனளிக்கும் வகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் ‘மோதானி’ (மோடி மற்றும் அதானி) எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மே 2025-ல் இந்திய (நிதித்துறை) அதிகாரிகள், சுமார் ரூ.33,000 கோடி நிதியை, அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ய எல்ஐசிக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து அழுத்தம் கொடுத்ததாக உள் விவகார ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும், மற்ற முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக நிதிச் சிங்கல்களை எதிர்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனத்தைக் காப்பாற்றுவது தங்கள் வேலை என்று எந்த அடிப்படையில் நிதி அமைச்சக மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் முடிவெடுத்தனர்?
செப். 21, 2024 அன்று அமெரிக்காவில் கவுதம் அதானி மற்றும் அவரது ஏழு கூட்டாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 4 மணி நேர வர்த்தகத்தில் எல்ஐசி ரூ.7,850 கோடி இழப்பைச் சந்தித்த நிலையில், இப்படி பொதுப் பணத்தை நண்பர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்வது நிதியை வீணடிக்கும் செயல் இல்லையா?
இந்தியாவில் அதிக விலை கொண்ட சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2,000 கோடி லஞ்சம் வழங்க திட்டமிட்டதாக அதானி குழுமத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் எஸ்இசி சம்மன் அனுப்ப, மோடி அரசு கிட்டத்தட்ட ஒரு வருடமாக மறுத்துவருகிறது.
இது ஒரு மிகப் பெரிய நிதி மோசடி. எல்ஐசி எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது என்பது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும். அது அதன் அதிகாரங்களுக்கு உட்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
எல்ஐசி மறுப்பு: முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என ‘வாஷிங்டன் போஸ்ட்’ சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை. கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி ஆவணமோ அல்லது திட்டமோ எல்ஐசியால் இதுவரை தயாரிக்கப்படவில்லை.
எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி, விரிவான ஆய்வுக்குப் பிறகு சுயமாக எடுக்கப்படுகின்றன. நிதித்துறை அல்லது வேறு எந்த ஒரு அமைப்புக்கும் இதில் எந்தப் பங்கும் இல்லை.
எல்ஐசி மிக உயர்ந்த தர நிலையைக் கொண்டுள்ளது. அதன் அனைத்து முதலீட்டு முடிவுகளும் தற்போதுள்ள கொள்கைகள், சட்டங்களில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு இணங்க, அதன் அனைத்து பங்குதாரர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படுகின்றன.
இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், எல்ஐசியின் வலுவான முடிவெடுக்கும் செயல்முறையை பாதிக்கக்கூடியதாக, அதன் நற்பெயருக்கும் பிம்பத்துக்கும், இந்திய நிதித்துறையின் அடித்தளங்களுக்கும் கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.