இந்தூர்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தூரில் நேற்று முன்தினம் அந்த அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக ஒருவர் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா, இலங்கையில் நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதி ஆட்டத்தில் வரும் 30-ம் தேதி விளையாடுகின்றன.
இந்த சூழலில் கடந்த 22-ம் தேதி (புதன்கிழமை) மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இங்கிலாந்து அணி உடன் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. இதில் 6 விக்கெட்டுகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த அடுத்த நாளான வியாழக்கிழமை அன்று காலை ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த வீராங்கனைகள் இருவர், அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து கஜ்ரானா சாலையில் உள்ள கஃபே ஒன்றுக்கு சென்றுள்ளனர்.
அது நடந்து செல்லும் தூரம் என்பதால் அவர்கள் இருவர் மட்டுமே அங்கு சென்றதாக தகவல். அப்போது மோட்டார்சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் அவர்களிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து வீராங்கனைகள் இருவரும் அணியின் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்தனர். அவர் காவல் துறையில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்தவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அகீல் கான் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இது மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசின் தோல்வியை சுட்டுவதாகவும், பெண்களுக்கான பாதுகாப்பு தேசத்தின் தூயமான நகரில் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன. இந்த சம்பவத்தை அடுத்து விரைந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநில அரசு கூறியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிசிசிஐ வருத்தம் தெரிவித்துள்ளது.