கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை மாமல்லபுரம் விடுதியில் விஜய் சந்திக்க ஏற்பாடு!

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் திங்கள்கிழமை தனித்தனியாக சந்திக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

முன்னதாக, கரூரில் உள்ள மண்டபத்தில், பாதிக்கப்பட்டோரை வரவழைத்து அவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டார். இதற்காக, கரூரில் மண்டபங்கள் பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யின் சந்திப்புக்கு கரூரில் மண்டபங்கள் கிடைக்க சிக்கல் நீடித்ததால், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக, பாதிக்கப்பட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தவெக நிர்வாகிகள் பேசியுள்ளனர். முதலில் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு அவர்களை அழைத்து வந்து சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரம் போர் பாயின்ட் தனியார் விடுதியில் சந்திப்பு நிகழ்ச்சி நாளை மறுதினம் (அக்.27) காலை நடைபெறுகிறது. இதற்காக, 41 பேரின் குடும்பத்தினரையும் மாவட்ட நிர்வாகிகள் மாமல்லபுரத்துக்கு அழைத்து வருகின்றனர். இதற்கான செலவுகள் அனைத்தையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களை தங்க வைப்பதற்காக, அந்த ஹோட்டலில் 50-க்கும் மேற்பட்ட அறைகளும் முன்வதிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு, பாதிக்கப்பட்டவர்களை விஜய் தனித்தனியாக சந்தித்து, அவர்களுடன் பேச இருக்கிறார். கடந்த மாதம் 27-ம் தேதி தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த மாதம் அதே நாளில் அவர்களது குடும்பத்தினரை விஜய் சந்திக்க இருப்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, கரூரில் கடந்த செப்.27-ம் தேதி விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் விஜய் வீடியோ வெளியிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து, சில நாட்கள் கழித்து, பாதிக்கப்பட்டோரிடம் வீடியோ காலில் பேசிய விஜய், நேரில் வருவதாக அவர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்குக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. மேலும், சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம் எனவும் விஜய் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.