"தகுதிக்கும் திறமைக்கும் எந்தப் படிநிலையும் இல்லை" – கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய பா.ரஞ்சித்

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் கபடி பிரிவில் இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி நாட்டுக்குத் தங்கப் பதக்கம் வென்றிருக்கின்றனர்.

தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தமிழக வீராங்கனையான சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவுக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், கார்த்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழக அரசு அவருக்கு பரிசுத்தொகை அறிவிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பா. ரஞ்சித், “பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச் சேர்ந்த’ வீர மகள் கார்த்திகாவிற்கு வாழ்த்துகள்.

கண்ணகி நகர் என்றாலே ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில், இன்றைக்கு ‘கண்ணகி நகர்’ என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை என்பதையும் கார்த்திகா மெய்ப்பித்துள்ளார்.

பொதுவாக, இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசுப் பரிசுப் பொருட்களையும் அரசுப் பணியையும் வழங்கி கௌரவிப்படுத்திவருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

முன்னதாக, சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த தமிழக அரசு, கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும்.

மேலும், கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.