புதுடெல்லி: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அந்நாட்டு அணு ஆயுதக் கிடங்கின் முழு கட்டுப்பாட்டையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்தார் என்றும், முஷாரப்பை அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்து வாங்கியது என்றும் முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ கூறினார்.
பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவர் உட்பட அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவில் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஜான் கிரியாகோ சமீபத்தில் செய்தி நிறுவனாம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், “பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர் பண உதவிகளை செய்து வசமாக்கியது. இதனால் அமெரிக்கா அப்போது பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கை முழுமையாக கட்டுப்படுத்தியது.
சர்வாதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதை அமெரிக்கா எப்போதும் விரும்புகிறது. ஏனென்றால், அப்போதுதான் பொதுமக்கள் கருத்து அல்லது ஊடகங்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாங்கள் அதன் அடிப்படையில்தான் முஷாரப்பை வாங்கினோம். நாங்கள் அவருக்கு மில்லியன் கணக்கான டாலர்களை ராணுவ மற்றும் பொருளாதார உதவியாக வழங்கினோம். இதனால் முஷாரப் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் அல்-கொய்தாவைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் இந்தியாவைப் பற்றியே அக்கறை கொண்டிருந்தனர். இதனால் அப்போது முஷாரப் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவித்தார்.
சவுதி அரேபியாவின் நேரடித் தலையீட்டிற்குப் பிறகு, பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் கதீர் கானை ஒழிக்கும் திட்டங்களை அமெரிக்கா கைவிட்டது. அவர்தான் பாகிஸ்தானின் அணுகுண்டின் வடிவமைப்பாளராக இருந்தார். நாங்கள் அப்போது இஸ்ரேலிய அணுகுமுறையை எடுத்திருந்தால், அவரைக் கொன்றிருப்போம். அவரைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. ஆனால் சவுதி எங்களிடம் வந்து, தயவுசெய்து அவரை விட்டுவிடுங்கள். எங்களுக்கு அப்துல் கதீர் கானை பிடிக்கும். நாங்கள் அவருடன் இணைந்து பணியாற்றுகிறோம் என்று கூறியதால் அவரை விட்டோம்” என்று கூறினார்.
பர்வேஸ் முஷாரப் 1999-ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலமாக பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினார். அதன்பின்னர் 2008 வரை அவர் பாகிஸ்தான் அதிபராக இருந்தார். முஷாரப் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி உயிரிழந்தார்.