ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு ராஜ்யசபா இடத்தில் வெற்றி வெல்வதற்காக பாரதிய ஜனதா கட்சி வாக்குத் திருட்டு மற்றும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி குற்றம் சாட்டினார்.
உதம்பூரில் ஊடகங்களிடம் பேசிய சுரிந்தர் சவுத்ரி, “தேசிய மாநாடு கட்சியின் மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் ஜம்மு – காஷ்மீர் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள். மேலும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான எங்கள் போராட்டத்தையும் முன்னெடுப்பார்கள். இருப்பினும், நான்காவது இடத்தில் பாஜகவின் வெற்றி சட்டவிரோதமானது.
நாங்கள் முன்பே கணித்தபடி, குதிரை பேரம் மூலம் அனைத்து மாநிலங்களவை இடங்களையும் வெல்ல பாஜக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. இருப்பினும், அவர்கள் விரும்பியபடி அனைத்திலும் வெற்றிபெற முடியவில்லை, ஒரே ஒரு இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. பாஜகவின் வெற்றிக்கு வாக்குத் திருட்டு மற்றும் குதிரை பேரம் மட்டுமே காரணமாக இருந்தது. அது இல்லாமல், அவர்கள் அந்த ஒரு இடத்தையும் வென்றிருக்க மாட்டார்கள்.
பாஜகவுக்கு மாற்றி வாக்களித்த எம்.எல்.ஏக்களை அடையாளம் காண கட்சி உள் விசாரணை நடத்தும். பாஜகவுக்கு வாக்களித்த ஜெய்சந்த் போன்ற துரோகிகள் எல்லா இடங்களிலும் உள்ளனர். இல்லையெனில், தேசிய மாநாட்டு கட்சி நான்கு இடங்களையும் வென்றிருக்கும்” என்று சவுத்ரி கூறினார்.
தேசிய மாநாடு கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே புரிதலும் இருப்பதாக வெளியான ஊகங்களை நிராகரித்த சவுத்ரி, “அவர்கள் சொல்வது தவறு, தேசிய மாநாட்டு கட்சி ஒருபோதும் பாஜகவுடன் எந்த ஒப்பந்தத்தையும் செய்து கொள்ளாது என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில் ஆளும் தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர்கள், பாஜகவை சேர்ந்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றனர். ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 4 மாநிலங்களவை எம்பி பதவிகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் 4 எம்பிக்களின் பதவிக் காலம் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து 4 மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த சவுத்ரி முகமது ரம்ஜான், சாஜித் கிட்ச்லூ, குர்விந்தர் சிங் ஆகியோரும் பாஜகவை சேர்ந்த சத் சர்மாவும் வெற்றி பெற்றனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் உள்ள மொத்தம் 95 இடங்களில் தேசிய மாநாடு கட்சிக்கு 42, காங்கிரஸுக்கு 6, சிபிஎம்க்கு 1 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவுக்கு 29, பிடிபி கட்சிக்கு 3, ஆம் ஆத்மி கட்சிக்கு 1 உறுப்பினர் உள்ளனர். சுயேச்சைகள் 8 பேர் உள்ளனர்.