வாஷிங்கடன்: அமெரிக்க அதிபரி அதிகாரபூர்வ வசிப்பிடம்தான் வெள்ளை மாளிகை. இது வெறும் வசிப்பிடம் மட்டுமல்ல. அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது உலகையே ஆட்டிப்படைக்கும் பல்வேறு அரசியல், பொருளாதார முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட / எடுக்கப்படும் ஓவல் அலுவலகத்தையும் உள்ளடக்கியது இந்த மாளிகை.
இந்த வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, அதில் ஒரு பால் ரூம் (ballroom – விருந்தரங்கம்) கட்ட வேண்டும் என்பது அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆசை. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் கூட அதைக் கட்டி முடித்தே தீருவேன் என்று பணிகளை ஆரம்பித்துவிட்டார் ட்ரம்ப். இதற்கான செலவு 300 மில்லியன் யுஎஸ் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2600 கோடிக்கு மேல்). ட்ரம்ப்புக்கு ஏன் இப்படியொரு ஆசை, எதற்காக இத்தனை பெரிய செலவு, இந்த பால் ரூமின் பயன்தான் என்னவென்று சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
காரணம் என்ன? – அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மிகச் சிறந்த கட்டிடக் கலை கொண்ட மாளிகைகளில் ஒன்று. வெளியில் இருந்து பார்க்கவே பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட இந்த மாளிகை உயர் பாதுகாப்பு கொண்டது. இந்த மாளிகைக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வருகையில் அவர்களை வரவேற்று உபசரிக்க ஒரு நல்ல விருந்தரங்கம் இல்லை என்பது ட்ரம்ப்பின் ஆதங்கம். அதனாலேயே ட்ரம்ப் அதிபர் தேர்தல் போட்டியின்போதிருந்தே, “நான் அதிபரானால், வெள்ளை மாளிகையில் பிரம்மாண்ட பால் ரூம் கட்டப்படும்” என்று கூறிவந்தார். அதன்படி தற்போது பால் ரூம் கட்டும் பணிகள் தொடங்கிவிட்டன. 2029 ஜனவரி இறுதிக்குள் இந்த கட்டுமானப் பணி முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 90 ஆயிரம் சதுர அடியில், ஒரே நேரத்தில் 650 பேரில் இருந்து 1000 பேர் வரை அமரக் கூடிய அளவில் இந்த பால் ரூம் கட்டப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் ஈஸ்ட் விங் எனப்படும் கிழக்குப் பகுதியில் தான் இந்த பால் ரூம் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தான் அமெரிக்க அதிபரின் மனைவியின் அலுவலகம் உள்ளது. 1948-ம் ஆண்டுக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய கட்டுமானப் பணி இதுதான்.
திட்டத்துக்கு எங்கிருந்து வருகிறது பணம்? – வெள்ளை மாளிகை அமெரிக்க வரலாற்றின் ஒரு சின்னம் என்பதால், அதனை இடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதேபோல் இந்த கட்டுமானப் பணியானது யுஎஸ் ஷட்டவுனுக்கு மத்தியில் நடக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளைக்கு அனுமதி தர வேண்டிய தேசிய முதன்மை திட்ட ஆணையம் அமெரிக்க அரசு முடக்க காலத்தில் செயல்படாது. இத்தகைய நிலையில் கட்டுமானப் பணி நடப்பதும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இவை ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதற்கான 300 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி எங்கிருந்து வருகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது இன்னொரு சர்ச்சையாக உருவாகியுள்ளது.

திங்கள்கிழமை பால் ரூம் கட்டுமானப் பணி தொடங்கியபோது ட்ரம்ப், அது பற்றி தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியிருந்தார். அதில் அவர், “150 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அதிபர்கள் இங்கொரு பால் ரூம் கட்டப்பட வேண்டும் என்று விரும்பினர். ஆனால், அதைச் செய்த முதல் அதிபர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன். அதுவும் வரி செலுத்துவோருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இந்தக் கட்டுமானப் பணி நடக்கப்போகிறது. ஆம், இந்த பால்ரூமுக்கு நிறைய பேர் நிதியளிக்கின்றனர். அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள், தாராள மனம் கொண்ட தேசியவாதிகள் தரவிருக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
ஆனால், இதற்கான பணத்தை அதிபர் ட்ரம்ப் சும்மா பெறவில்லை. பல பெரிய நிறுவனங்களுக்கு பல சகாயங்களை செய்து கொடுத்து இதை அவர் சாத்தியமாக்கியுள்ளார் என்று அமெரிக்க ஊடகங்கள் பல செய்திகள் வெளியிட்டுள்ளன.
எந்தெந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன? – யூடியூப் நிறுவனம், அமேசான் நிறுவனம், ஆப்பிள் நிறுவனம், காயின்பேஸ், கூகுள், லாக்ஹெட் மார்டின், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் போன்ற பெறு நிறுவனங்களும். லுட்நிக் ஃபேமிலி என்ற செல்வந்தர் குடும்பமும், விங்கிள்வோஸ் ட்வின்ஸ் என்ற பெரும்பணக்கார சகோதரர்களும் பால் ரூம் கட்ட பணம் தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் யூடியூப் நிறுவனம் மட்டும் 22 மில்லியன் பணம் தரும் என்பது கசிந்துள்ளது. மற்ற நிறுவனங்கள், தனி நபர்களின் பங்களிப்பு பற்றிய தகவல்கள் இல்லை.
இதுதவிர அல்ட்ரியா க்ரூப், பூஸ் ஆலன் ஹாமில்டன், கேட்டர்பில்லர், காம்காஸ்ட், ஜெ பெப் அண்ட் எமிலியா ஃபஞ்சுல், ஹார்ட் ராக் இன்டர்நேஷனல், ஹெச்பி, மெடா ப்ளாட்ஃபார்ம்ஸ், மைக்ரான் டெக்னாலஜி, நெக்ஸ்ட் இரா எனர்ஜி, பலன்டிர் டெக்னாலஜிஸ், ரிப்பிள், ரேனால்ட்ஸ் அமெரிக்கன், டி-மொபைல், டீதர் அமெரிக்கா, யூனியன் பசிஃபிக், அடல்சன் ஃபேமிலி ஃபவுண்டேஷன், ஸ்டெஃபான் இ ப்ரோடி, சார்லஸ் அண்ட் மரிஸா காஸ்கரில்லா, எட்வர்ட் அண்ட் ஷாரி க்ளேஸர், ஹரோல்ட் ஹம், பெஞ்சமின் லியோன் ஜூனியர், லாரா அண்ட் ஐசக் பெர்ல்முட்டர் ஃப்வுண்டேஷன், ஸ்டீஃபன் ஏ ஸ்காவர்ஸ்மேன், கான்ஸ்டான்டின் ஸோகோலோவ், கெல்லி லோஃப்லர் அண்ட் ஜெஃப் ஸ்ப்ரெச்சர், பாவ்லோ டிராமனி என பட்டியல் நீள்கிறது.
தனியார் நிதி ஏற்புடையதா? – அமெரிக்க அரசமைப்பு வழக்கறிஞர் ப்ரூஸ் ஃபெய்ன் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் கூறும்போது, ”அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையின் கட்டுமானப் பணிகளுக்கு தனியாரிடம், தனி நபர்களிடம் பணத்தை நன்கொடையாகப் பெறுவது அமெரிக்க அரசியல் சாசனத்தின் ஆன்ட்டி-டிஃபிசியன்ஸி ஆக்ட் (Anti-Deficiency Act)-க்கு விரோதமானது” என்கிறார்.
இந்தச் சட்டமானது அமெரிக்க அரசு இயந்திரங்கள் அதன் செலவு செய்யும் சக்தியைக் கடந்த செலவினங்களை மேற்கொள்வதைத் தடை செய்கிறது. அப்படி செலவு அதிகமாகும் திட்டத்துக்காக தனிநபர்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து எவ்வித பணச் சலுகை, சேவை சலுகையை பெறுவதையும் தடை செய்கிறது. நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் இத்தகைய செலவுகளை அமெரிக்க அரசு செய்ய இயலாது.

ஓர் ஒப்பீட்டுக்காக உதாரணம் ஒன்றை இங்கு முன்வைக்கிறோம். அமெரிக்கா – மெக்சிகோ இடையே ஒரு பெருஞ்சுவரைக் கட்ட முடிவெடுத்து அதற்கு நாடாளுமன்றம் நிதி ஒதுக்காமல் இருக்க, அதற்கு அவர் எலா மஸ்க் அல்லது பிற பில்லினர்களிடம் பணம் பெற்று கட்டினால் அது எப்படி இருக்கும். அப்படிதான் இப்போது ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கிழக்குப் பகுதியில் பால் ரூம் கட்டுவதும் என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.
மேலும், ட்ரம்ப் அரசியல்வாதி, அமெரிக்க அதிபர் என்பதைத் தாண்டி ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத் தலைவராக இருந்தவர். ஒரு தொழிலதிபராக அவர் எப்போது எந்த விஷயத்திலும் டீல் பேசுபவராகவே இருப்பார். அதனால் பால் ரூம் கட்ட நிதி கொடுப்பவர்களுக்கு சில சலுகைகள், சில அப்பாயின்ட்மென்ட்கள், சில மன்னிப்புகள் என பிரதி உபகாரங்கள் நீளும் என்று அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.