Exclusive: சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'மயிலா'; நடிகை டூ இயக்குநர் – செம்மலர் அன்னம் பேட்டி

அம்மணி, மகளிர் மட்டும், பொன்மகள் வந்தாள், சில்லுக் கருப்பட்டி, வலிமை, கள்வன், ஆயிரம் பொற்காசுகள், குரங்கு பொம்மை, யாத்திசை, மாவீரன், அயலான், அந்தகன் எனத் தொடர்ந்து தன் யதார்த்தமான நடிப்பால் ரசிக்கர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் நடிகை செம்மலர் அன்னம்.

இயக்குநராக வேண்டும் என்றக் கனவுடன் சென்னைக்கு வந்தவர், விபத்தாக நடிக்கத் தொடங்கி, நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

மயிலா
மயிலா

அழுத்தமான கதாப்பாத்திரம் என்றால், யோசிக்காமல் செம்மலர் அன்னத்தை நடிக்க வைத்துவிடலாம் என இயக்குநர்களின் ‘விஷ் லிஸ்டில்’ இடம் பிடித்த இவருக்கு, இயக்கமும் கை வந்தக் கலையாம்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இன்னொருபக்கம் தன் இயக்குநர் என்ற இலக்கையும் துரத்தி வந்தார். இப்போது அவரின் கனவு நனவாகி, முதல் படத்தை இயக்கியிருக்கிறார்.

நியூட்டன் சினிமா மற்றும் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் `மயிலா’ மூலம் இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார் செம்மலர் அன்னம்.

மெலோடி டார்கஸ், வி. சுடர்கொடி, கீதா கைலாசம், சத்யா மருதானி, ஆட்டோ சந்திரன், RJ பிரியங்கா, ஜானகி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம், சர்வதேச திரைப்பட விழாவான 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR)-வின் `பிரைட் ஃப்யூச்சர்’ (Bright Future) பிரிவில் திரையிடத் தேர்வாகியிருக்கிறது.

கேன்ஸ், வெனிஸ், பெர்லின், லோகார்னோ போன்ற திரைப்பட விழாக்களுடன் ஒப்பிடக்கூடிய ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8, 2026 வரை திரையிடப்படுகிற, அனைத்து மொழித் திரைப்படங்களில் ஒன்றாக ‘மயிலா’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

மயிலா படப்பிடிப்புத் தளத்தில் செம்மலர் அன்னம்
மயிலா படப்பிடிப்புத் தளத்தில் செம்மலர் அன்னம்

இந்த செய்தி வெளியானதும் நடிகையும், இயக்குநருமான செம்மலர் அன்னத்துக்கு வாழ்த்துளை தெரிவித்துப் பேசத் தொடங்கினோம்…

பெரும் கனவு நனவான மகிழ்ச்சியில் பேசத் தொடங்கியவரிடம்,

`நடிகையிலிருந்து இயக்குநர் எப்படி சாத்தியமானது?’

“நான் நடனமாடுவதற்கு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட கால கட்டத்தில்; நடனம், நடிப்பு கற்று தருவதுதான் இயக்குநரின் பணி என்று ஒருவர் என்னிடம் கூறினார்.

இதனால், பின்னணியில் இயங்கும் போது புறக்கணிக்கப்பட மாட்டோம் என்று நம்ப தொடங்கினேன். அதன்படியே என் வகுப்பு தோழிகளை வைத்து நாடகமும் இயக்கினேன். அதற்கு உடனடி அங்கீகாரம் கிடைத்தது. என் நம்பிக்கை உறுதியானதையடுத்து இயக்குநர் ஆவதுதான் எனது லட்சியம் என்ற கனவை சுமக்க தொடங்கினேன்.

என்னால் இயக்குநராக முடியுமா? என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்தாலும், அந்தக் கனவை கலைக்க விரும்பியதே இல்லை. அதற்காகவே வீட்டில் பிடிவாதமாக விஸ்காம் படிக்க வேண்டும் என அடம்பிடித்து படித்து முடித்தேன்.

கல்லூரி காலங்களில் குறும்படங்களை இயக்கினேன். அந்தக் குறும்படங்களெல்லாம் விருதுகளையும் பெற்றிருக்கிறது. எனவே, இயக்குநராக வேண்டும் என்றக் கனவை நோக்கி மெல்ல நகர்கிறோம் என்ற திருப்தி இருந்தது.

வாழ்நாளில் ஒரு முழு நீளப் படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். அந்தக் கனவை ‘மயிலா’ நிறைவேற்றியிருக்கிறாள்.

மெலோடி டார்கஸ் - Melodi Dorcas
மெலோடி டார்கஸ் – Melodi Dorcas

`நடிகர்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?’

“இந்தப் படத்தின் நாயகி மெலோடி டார்கஸ். அற்புதமான நடிகை. நாடகத் துறைக்கு அங்கீகாரம் குறைவு, பார்வையாளர்கள் குறைவு. ஆனாலும், எந்த எதிர்பார்ப்புகளுமின்றி, பல ஆண்டுகளாக முழுக்க முழுக்க தியேட்டர் நாடகத்துக்காகவே தன்னை அர்பணித்துக்கொண்டு இயங்குபவர்.

இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்தான் என் கதைக்கு தேவையாக இருந்தார். மெலோடி என் நீண்டகாலத் தோழியும் கூட.

மேலும், இந்தப் படத்துக்கு லைவ் டப்பிங். அதனால் நன்கு தமிழ்ப் பேசும், குரல்வளம் உள்ள ஒருவராக இருக்க வேண்டும் எனக் கருதினேன். அதற்கு உடலாலும் குரலாலும் தகுதியானவர் மெலோடி டார்கஸ்.

இந்தப் பட ஷூட்டிங் முடித்துவிட்டு எடிட்டிங் செய்யும்போது நான் பலமுறை அந்தப் படத்தைப் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் மெலோடியின் நடிப்பு சலிப்பே இல்லாமல் பார்த்து ரசிக்கும்படி இருந்தது. அது மெலோடியின் மேஜிக்கல் பர்ஃபாமன்ஸ்.”

சுடர்கொடி
சுடர்கொடி

`உங்கள் மகள் சுடர்கொடி நடித்திருக்கிறாரே…’

“இந்தப் படத்தில் என் மகள் சுடர்கொடி நடிக்கும்போது அவளுக்கு 4 வயது இருக்கும். இப்போது வளர்ந்துவிட்டாள். அவளை இந்தப் படத்துக்குள் கொண்டுவந்ததற்கு காரணம் என் சுயநலம் என்று கூட சொல்லலாம்.

என் மகள் என்பதால் அவளிடம் எப்படி வேண்டுமோ, எப்போது வேண்டுமோ, எத்தனை முறை வேண்டுமோ அப்படி நடிக்க வைத்துக்கொள்ளலாம். ஒரு நடிகையாக என் மகளை கவனித்திருக்கிறேன்.

அதனால் என் கதைக்கு அவள் சரியாக இருப்பாள் என நம்பினேன். மேலும், அவளின் மனநிலையிலிருந்து அந்தக் கதைச் சூழலை என்னால் அணுக முடிந்தது.

அதுக்கேற்றதுபோன்ற வசனங்கள் எழுந்த முடிந்தது. அவள் இயல்பிலேயே வசனங்கள் இருந்ததால் அவளுக்கு நடிப்பதில் சிரமம் இல்லை எனக் கருதுகிறேன். மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார்.

படம் பார்த்த எல்லோரும் அவளின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது எனப் பாராட்டினார்கள்.”

“இந்தப் படம் குறித்து இயக்குநர் ரஞ்சித் என்ன சொன்னார்?”

“முதலில் இந்தப் படத்தை ரஞ்சித் சார் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய விருப்பமாக இருந்தது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது… என் திரைப் பயணத்தில் ஒருகட்டத்தில் மனமுடைந்து சோர்வாக இருந்த காலம் அது.

மயிலா படப்பிடிப்புத் தளத்தில் செம்மலர் அன்னம்
மயிலா படப்பிடிப்புத் தளத்தில் செம்மலர் அன்னம்

அப்போது வானம் கலைத் திருவிழாவில் தியேட்டர் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 10 நாள் நடித்தேன். திரைப்படத்தில் நடிப்பதை விட கூடுதல் சம்பளம் கொடுத்து என்னை அங்கீகரித்தார்கள்.

அந்த எதிர்பாரா அங்கீகாரம்தான் என்னை மீண்டும் உத்வேகத்துடன் ஓட உதவியாக இருந்தது. அப்போதிலிருந்து ரஞ்சித் சார் மீதான மரியாதை அதிகரித்தது. அதனாலேயே என் படத்தை அவர் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.

என்னை அவருக்கு நடிகையாகதான் தெரியும். நான் படம் இயக்கியிருக்கிறேன் என்றதும் வியந்து பார்த்து பாராட்டினார்.

படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் குறிப்பிட்டு ‘படம் கைதேர்ந்த இயக்குநரின் இயக்கத்தில் உருவானது போல மிகவும் முதிர்ச்சியுடன் எடுக்கப்பட்டிருக்கிறது’ எனப் பாராட்டியது நெகிழ்வாக இருந்தது.

அப்போதுதான் என் இயக்குநர் கனவு குறித்தெல்லாம் பேச வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலின் இறுதியில், இந்தப் படத்துக்கான எந்த உதவி வேண்டுமனாலும் செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறினார். அவரின் பாராட்டும், நம்பிக்கை வார்த்தைகளும் பெரும் பலமாக உணர்ந்தேன்.”

மயிலா படப்பிடிப்புத் தளத்தில் செம்மலர் அன்னம்
மயிலா படப்பிடிப்புத் தளத்தில் செம்மலர் அன்னம்

`பிஸியான எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் எப்படி இந்தப் படத்துக்குள் அழைத்து வந்தீர்கள்?’

“இந்தப் படம் தொடங்குவதற்கு ஒருவாரத்துக்கு முன்பு, நண்பர் ஒருவர் ‘இந்தக் கதையை எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்திடம் சொல்லலாமே… அவர் எடிட் செய்தால் சிறப்பாக இருக்கும்.

இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு பெரியளவில் ஆதரவளிப்பார்’ என்றார்.

அவர் எவ்வளவுப் பெரிய எடிட்டர்… சிம்பிளாக எடுக்கும் இந்தப் படத்தின் கதையை அவரிடம் எப்படி சொல்வது? என்றத் தயக்கம் இருந்தது. அதை உடைத்து அவரை அணுகினேன்.

அவர் ஒரு பெண் இயக்குகிறார் என்ற எந்த சிம்பதியும் இல்லாமல், முறையாக கதையையும், முழு விவரங்களையும் கேட்டுவிட்டு எடிட் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

அந்த நிமிடம் நம் வேலையை ஒருவர் முழுவதுமாக அங்கீகரிக்கிறார் என்றப் புதுத் தெம்பு வந்தது.

அப்போதிலிருந்து என் நலம்விரும்பியாக ஒவ்வொரு சூழலிலும் எனக்கு முறையாக ஆதரவளித்து பாராட்டி வருகிறார்.

ஶ்ரீகர் பிரசாத்
ஶ்ரீகர் பிரசாத்

இதுதவிர, ஶ்ரீகர் பிரசாத் சார் எடிட் செய்கிறார் என்கிறபோது, அது எங்கள் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

`இது நல்லப்படமாகதான் இருக்கும். அப்படி இல்லை என்றால் ஶ்ரீகர் பிரசாத் ஒத்துக்கொள்ளமாட்டார். படத்தில் என்னமோ இருக்கிறது’ என்ற நல்லெண்ணம் எல்லோருக்கும் உருவானது.

இந்தப் படத்தின் எடிட்டிங் முடிந்ததும் ஶ்ரீகர் சார், இயக்குநர் ராம் சாரிடம், இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ராம் சாரும் படத்தை பார்த்துவிட்டு, “இந்தப் படத்தின் கதைக் கரு சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டிய படம்” எனப் பாராட்டி கூடுதல் நம்பிக்கையளித்தார். இப்படித்தான் இந்தப் படத்துக்கான வரவேற்பு மகிழ்வை தருகிறது.”

“மயிலா என்ன சொல்ல வருகிறாள்?”

“ஆண் மயில் தோகை விரித்து ஆடுவதற்கான சுதந்திரம் இருப்பதைப் போல, பெண் மயிலுக்கும் சுதந்திரம் இருக்கிறது என்பதைதான் மயிலா அழுத்தம் திருத்தமாகச் சொல்வாள்.

இந்தப் படத்தை வணிக ரீதியாக எப்படி கொண்டு செல்வது என்ற தயக்கம் இருந்தது. ஆனால், நியூட்டன் சினிமா இந்தப் படத்தை வாங்கியிருக்கிறார்கள்.

மயிலா படப்பிடிப்புத் தளத்தில் செம்மலர் அன்னம்
மயிலா படப்பிடிப்புத் தளத்தில் செம்மலர் அன்னம்

இதுபோன்ற படத்துக்கான சப்போர்ட் அவர்களிடம் எப்போதும் இருக்கும் என்பதால், இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வோம் எனக் கூறியிருக்கிறார்கள்.

பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு இந்தப் படத்தை அனுப்பும் திட்டம் இருக்கிறது. அதற்குப் பிறகு இந்தப் படம் பெரிய திரைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்.” என்றார் புன்னகையுடன்.

தொடர்ந்து நடிப்புக்கு விருதுகளை வாங்கியவர், அடுத்து இயக்கத்துக்கும் விருதுகளை குவிக்க விகடன் சார்பில் வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.