கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் ரூ.1.15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. ஒரு வழக்கில் இருந்து பெயரை நீக்கி ராஜன் என்பவரை விடுவிப்பதற்காக தனது வீட்டுக்கு வரவழைத்து லஞ்சம் பெற்ற அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைதுசெய்த நிலையில் மயக்கம் ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அருள் பிரகாஷ் போன்று தக்கலை காவல் நிலைய அதிகாரி ஒருவர் ஒரு வழக்கில் லஞ்சம் பெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு மேல் காவல்துறை பதவியில் இருக்கும் அதிகாரிகள் சொந்தமாக வீடு, நிலம் உள்ளிட்டவைகளை வாங்கி சொத்துக்களை குவித்துவருவதாக புகார் எழுந்தது. அவ்வப்போது போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்திய சம்பவங்களும் இதற்கு முன்பு நடந்துள்ளன. எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை தொடர்ச்சியாக பத்து ஆண்டுகளுக்குமேல் ஒரே மாவட்டத்தில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கை இருந்துவருகிறது. பல ஆண்டுகளாக மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை உள்ளடக்கிய நேசமணி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கி சிக்கி கைதான நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இனியும் இதுபோன்ற பிரச்னை எழாமல் இருக்க பல ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என டி.ஐ.ஜி-க்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 14 பேர் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் மாவட்டத்துக்குள்ளேயே பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் இரணியலுக்கும், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி குளச்சலுக்கும், இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கும், குளச்சல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தூத்துக்குடி மெஞ்ஞானபுரத்திற்கும், தக்கலை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கும், வடசேரி இன்ஸ்பெக்டர் உமா தக்கலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நேசமணி நகர் சப் இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா, சுசீந்திரம் சப் இன்ஸ்பெக்டர் பெனடிக்ட், புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தக்கலை மதுவிலக்கு பிரிவிற்கும், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி நில அபகரிப்பு பிரிவிற்கும், வடசேரி சப் இன்ஸ்பெக்டர் கீதா திருவட்டாருக்கும், கன்னியாகுமரி சப் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் சுசீந்திரத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சார்லட் கோட்டாருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர அன்பு பிரகாஷ் இன்ஸ்பெக்டராக இருந்த நேசமணிநகர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் அசோகன், ஏட்டு சதீஷ் மற்றும் இன்ஸ்பெக்டரின் டிரைவர்கள் ராதாகிருஷ்ணன், விஜில் ஆகிய 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மோசமான செயல்பாடுகொண்ட, பல ஆண்டுகளாக தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை இடம் மாற்றுவதற்காக இரண்டாம்கட்ட லிஸ்ட் தயாராகி வருவதாகவும் விரைவில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.