இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் உயிரிழந்தனர். இதையடுத்து கத்தார் மற்றும் துருக்கி தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன. தோகாவில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 19-ஆம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையில், பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே 2-ஆம் சுற்று பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் இஸ்தான்புலில் தொடங்கியது.
இதன் முதல் நாளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது:“இஸ்தான்புலில் ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால், பாகிஸ்தான் வெளிப்படையான போரைத் தொடங்கும். ஆனால் அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை நான் கண்டேன்,” என்றார்.