மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கடமையாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இயற்கைப் பேரிடர் சூழல்களில் எதிர்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்துக்கான அடையாளம். இப்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்றுதான் செயல்படுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமாகவோ மக்களுக்கு உறுதுணையாக உண்மையாகவோ எதையும் செய்யும் எண்ணமில்லாமல் இருக்கிறார். நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் அவரது கட்சியினரும் சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள்தான் என்பதை அரசின் தொடர் செயல்பாடுகள் நிரூபித்துவிட்டன.
அத்துடன், ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு உள்ளது. எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தமிழகத்தில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை எஸ்ஐஆர் மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பாஜகவும் அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றிபெற்றுவிடலாம் என கணக்கு போடுகிறார்கள்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பின் வாயிலாக இரண்டரை கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை இணைத்துள்ளோம். களத்தில் நமக்கான பணிகள் முடிவடையவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக, நாளை (அக்.28-ம் தேதி) காலை மாமல்லபுரத்தில் பயிற்சிக் கூட்டம் நடத்தப்படவிருக்கிறது. ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி‘ என்ற இலக்குடன் களப்பணியாற்றுவதற்கான இந்தப் பயிற்சிக் கூட்டம், எனது தலைமையில் நடைபெறுகிறது.
இதற்குப் பிறகு ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞரணி, பாகமகளிரணி, பாகத்துக்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்பதை முன்னெடுக்க வேண்டும். மாநில நிர்வாகியாக இருந்தாலும் கூட அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும். மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கடமையாற்ற வேண்டும்.
எதிர்க்கட்சியான அதிமுக தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் திமுகவினரும் தோழமைக் கட்சியினரும்தான். என்னுடைய வாக்குச்சாவடியில் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என ஒவ்வொரு தொண்டரும் உறுதியேற்று, களப்பணியாற்றினால், எல்லா வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-ல் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைவது உறுதியாகிவிடும். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கின்ற திமுக ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.