தன் மீதான தாக்குதல் வழக்கை புறக்கணிக்க கவாய் விருப்பம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நீதிமன்ற அறையில் நிகழ்ந்த தாக்குதலை அவர் புறக்கணிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசா​ரணைக்​காக கடந்த 6-ம் தேதி கூடியபோது, வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாயை நோக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் போலீ​ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். இதன் பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மால்யா பக்சி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் செயலை புறக்கணிப்பதே அதற்குரிய அவமதிப்பு. இவ்விஷயத்தில் நீதிமன்றம் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் நிலைமையை மேலும் மோசமாக்கும். நீதி நிர்வாக அமைப்பில் எந்த பங்கும் வகிக்காத ராகேஷ் கிஷோரின் செயலின் ஆயுளை நீட்டிக்கும்.

மேலும், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த விவகாரத்தை தங்களின் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்துவார்கள். எனவே, இச்சம்பவம் இயல்பாக மறக்கப்படுவதே சரியாக இருக்கும். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், பெருந்தன்மையுடன் அவரை மன்னித்துள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” என நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

“தலைமை நீதிபதி இந்த விவகாரத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளபோது அது குறித்து வேறு ஒரு அமர்வு விசாரிக்க வேண்டுமா அல்லது இது அட்டர்னி ஜெனரலின் பொறுப்பா? நீதிமன்றத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களை செய்தியாக வெளியிடுவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படுவது குறித்து நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும். மேலும், நீதிமன்ற அறைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும்” என நீதிபதி ஜோய்மால்யா பக்சி தெரிவித்தார்.

அப்போது, உச்ச நீதிமன்ற பார் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் மற்றும் வழக்கறிஞர் பிரக்யா பாகேல் ஆகியோர், “நீதிமன்ற அறையில் நடந்த தாக்குதலை தலைமை நீதிபதி மன்னித்தாலும், ஊடகங்களில் பேசும் ராகேஷ் கிஷோர் தனது செயலுக்கு எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, தனது செயல் குறித்து மீண்டும், மீண்டும் பெருமையாகப் பேசி வருகிறார். மீண்டும் அதைச் செய்வேன் என்றும் அவர் கூறுகிறார்.

இது நீதிமன்றத்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு. இதை நாங்கள் விட்டுவிட முடியாது. நாங்கள் நீதிமன்றம் எனும் அமைப்பு பற்றி பேசுகிறோம். நிறுவனத்துக்கு அவமரியாதை செய்யப்படுவதை ஏற்க முடியாது. தலைமை நீதிபதி அவரை விடுவித்தது, அடுத்தடுத்த அவமதிப்பைத் தொடருவதற்கான உந்துதலை அளித்துள்ளது. நாம் செயல்படவில்லை என்றால் நீதிமன்றம் நகைச்சுவையாக மாறிவிடும்.” என தெரிவித்தனர்.

அப்போது பேசிய நீதிபதி சூர்ய காந்த், “இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழக்கை முடிக்கவில்லை. அதேநேரத்தில், எந்த ஒரு உடனடி நடவடிக்கையும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும்.” எனக் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.