“தமிழகத்திலும் எஸ்ஐஆர்… வாக்குத் திருட்டை முறியடிப்போம்!” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ‘தமிழ்நாட்டிலும் எஸ்ஐஆர்: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!’ என்று தலைப்பிட்டு அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே, பிஹாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் – பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும். மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்துக்கு எதிராக போராடிட, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்’ என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அதன் முழு விவரம்: SIR விவகாரம்: நவ.2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் அழைப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.