Prithvi Shaw : முன்னாள் இந்திய அண்டர்-19 அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா, ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 2025-26ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி எலைட் குரூப் பி போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ஷா, இரண்டாவது போட்டியிலேயே ரஞ்சி கோப்பை வரலாற்றின் மூன்றாவது அதிவேக இரட்டை சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.
Add Zee News as a Preferred Source
சண்டிகரில் உள்ள செக்டார் 16 மைதானத்தில் மகாராஷ்டிரா மற்றும் சண்டிகர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கிறது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ப்ரித்வி ஷா ஆட்டமிழக்காமல் அபாரமாக விளையாடினார். 141 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 200 ரன்கள் விளாசி அசத்தினார். இந்த இன்னிங்ஸில் 28 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் பறக்க விட்டார்.
ரஞ்சி டிராபி அதிவேக இரட்டை சதம்
ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த சாதனையானது, ஐதராபாத்தைச் சேர்ந்த தன்மய் அகர்வால் வசம் உள்ளது. அவர் 2024ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக 119 பந்துகளில் இரட்டை சதம் விளாசி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக, முன்னாள் இந்திய மற்றும் மும்பை வீரர் ரவி சாஸ்திரி இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் 1985ஆம் ஆண்டு பரோடா அணிக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் 123 பந்துகளில் இரட்டை சதம் அடித்து நீண்ட காலம் சாதனையைத் தன்வசம் வைத்திருந்தார். தற்போது, ஷா 141 பந்துகளில் இந்தச் சாதனையைப் படைத்து, ரஞ்சி டிராபியில் மூன்றாவது அதிவேக இரட்டை சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இப்பட்டியலில் ஐதராபாத் வீரர் ராகுல் சிங் 143 பந்துகளில் இரட்டை சதம் அடித்து நான்காவது இடத்தில் உள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் உலகச் சாதனை
பொதுவாக, முதல் தர கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த உலகச் சாதனை, ஆப்கானிஸ்தான் வீரர் ஷஃபிகுல்லா ஷின்வாரி வசம் உள்ளது. இவர் 2017-18 உள்நாட்டுப் போட்டியில் வெறும் 89 பந்துகளில் இரட்டை சதம் அடித்துச் சாதனை படைத்தார்.
பிரித்திவி ஷா-வின் புதிய பயணம்
ரஞ்சி கோப்பையில் அதிக வெற்றிகளைப் பெற்ற மும்பை அணியை விட்டு விலகிய ப்ரித்வி ஷா, இந்த சீசனில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடத் தொடங்கினார். கேரள அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அவரது முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 102 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். தற்போது சண்டிகருக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை ஏற்கனவே பெற்றிருக்கும் ப்ரித்வி ஷா, 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் ஏற்கனவே 2023ஆம் ஆண்டில் மும்பை அணிக்காக அசாம் அணிக்கு எதிராக ஒரு முச்சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
S.Karthikeyan