புவனேஷ்வர்,
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் அடுத்த 12 மணி நேரத்தில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயல் வரும் 28 ஆம் தேதி ஆந்திராவின் காக்கிநாடா கரையைக் கடக்க உள்ளது. புயல் காரணமா ஒடிசாவில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் 30 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வங்க கடலோரம் உள்ள மாவட்டங்களில் எச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் கரை திரும்புவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் அக். 28-ஆம் தேதி தீவிர புயலாக (மோந்தா) வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 – 100 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.