இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடிய பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில்தான் இந்திய அணியில் இடம் பெற்றார். இதையடுத்து நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அவர் பெரிதாக விக்கெட் எடுத்து ஈர்க்கவில்லை என்றாலும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.
Add Zee News as a Preferred Source
இருப்பினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் முகமது ஷமியின் ஃபிட்னஸ் பிரச்சனையை குறிப்பிட்டு அணியில் எடுக்கப்படாததன் காரணத்தை கூறினார். தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் விரக்தி அடைந்த முகமது ஷமி, ஃபிட்னஸாக இல்லாமல்தான் ரஞ்சி போட்டிகளில் விளையாடுகிறேனா என கேள்விகளை எழுப்பினார்.
முகமது ஷமியின் இந்த பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதங்களை எழுப்பின. இது தொடர்பாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கேட்டபோது, முகமது ஷமி இதனை உண்மையாகவே கூறி இருந்தால், அவருடன் பேசுவதற்கான நேரம் இது என தெரிவித்தார். இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து முகமது ஷமி வேண்டுமென்றே ஓரம்கட்டப்படுகிறார் என ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், ரஞ்சி டிராபியின் ஒரு போட்டியில் 8 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 18.3 ஓவர்கள் வீசிய முகமது ஷமி, 44 ரன்கள் மாட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீசி 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். முன்னதாக முகமது ஷமி பெங்கால் அணிக்காக 7 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில், தற்போது 8 விக்கெட்கள் வீழ்த்தி தன்னை நிரூபித்துள்ளார்.
இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. தனது ஃபார்மை நிரூபித்த ஷமி, ஒருவேளை தென்னாப்பிரிக்கா தொடரில் இணைந்தால் அவர் யாருடைய இடத்தில் விளையாடுவார் என்ற கேள்வி எழும்பி உள்ளது.
About the Author
R Balaji