சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை – கவுதம் கம்பீர்

கான்பெர்ரா,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 29ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை என தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அதிரடியாக ஆடும் அணுகுமுறையுடன் இந்திய அணி களமிறங்குவதால் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் பார்ம் குறித்து நான் கவலைப்படவில்லை.

அதிரடியாக விளையாடும்போது இதுபோன்ற தவிர்க்க முடியாத சில தோல்விகளும் இருக்கும். 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து சூர்யகுமார் யாதவால் அவர் மீதான விமர்சனங்களை தவிர்க்க முடியும். ஆனால், அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் தோல்வி ஏற்பட்டாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என நாங்கள் ஆலோசித்துள்ளோம். அதன் காரணமாக அவர் அதிரடியாக விளையாடுகிறார்.

தற்போது அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமான பார்மில் உள்ளார். அவர் ஆசிய கோப்பை தொடர் முழுவதும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் ரன்கள் குவிக்க தொடங்கிவிட்டால் அவரும் பொறுப்பினை பகிர்ந்து கொள்வார். டி20 கிரிக்கெட்டில் தனிப்பட்ட வீரர்களை நாங்கள் மதிப்பிடுவதில்லை.

அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்க முயற்சி செய்கையில் அடிக்கடி தோல்விகள் ஏற்படும். சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பான மனிதர். சிறந்த மனிதர்கள் தலைவர்களை உருவாக்குகிறார்கள். அவர் இயல்பாக விளையாடுவது டி20 வடிவிலான கிரிக்கெட்டுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்துகிறார்.

தோல்விகளுக்கு பயப்படக்கூடாது என எங்களது முதல் உரையாடலில் இருந்து பேசி வருகிறோம். மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக மாற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு நான் செயல்படவில்லை. இந்திய அணியை அச்சமின்றி சுதந்திரமாக விளையாடும் அணியாக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி போன்ற பெரிய போட்டிகளில் கேட்ச்சுகளை தவறவிடுவது, தவறான ஷாட் விளையாடி ஆட்டமிழப்பது, எளிதில் ரன்கள் எடுக்கும் விதமாக தவறான பந்துவீசுவது போன்றவை குறித்து பெரிய அளவில் கவலைப்பட வேண்டாம் என வீரர்களிடம் கூறினேன். மனிதர்கள் தவறு செய்வார்கள். இந்திய அணி நிர்வாகத்தில் கூறும் கருத்துகளை மட்டுமே வீரர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

தவறுகள் செய்வதற்கு ஒருபோதும் பயப்படபோவதில்லை என நானும், சூர்யகுமார் யாதவும் கூறியிருக்கிறோம். போட்டி எந்த அளவுக்கு பெரியதோ அந்த அளவுக்கு வீரர்கள் அச்சமின்றி விளையாட வேண்டும். அச்சத்துடன் விளையாடுவது எதிரணிக்கு சாதகமாக அமையும். நமக்கு இருக்கும் திறமைக்கு அச்சமின்றி விளையாடினால் எல்லாம் சிறப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.