ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை இணை இயக்குனர், லஞ்சத்தை தனது மனைவி மூலம் சம்பளமாக பெற்றுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறையில் இணை இயக்குனராக பணியாற்றுபவர் பிரத்யுமான் திக்ஷித். இவரது மனைவி பூனம் திக்ஷித். ஓரியான்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாஃப்ட்வேர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ராஜஸ்தான் அரசின் டெண்டர்களை பெற்றுவந்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு பிரத்யுமான திக்ஷித்தான் டெண்டர்களை வழங்கியுள்ளார்.
இதற்கு பிரதிபலனாக தனது மனைவியை இந்த 2 நிறுவனங்களிலும் ஊழியராக கணக்குகாட்டி வேலைக்கு அனுப்பாமலேயே சம்பளம் பெற்றுவந்துள்ளார்.
இது குறித்து ஒருவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கடந்தாண்டு உத்தரவிட்டது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு செட்படம்பர் வரை பூனம் திக்ஷித்தின் 5 வங்கி கணக்குகளில், ஓரியான்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாஃப்ட்வேர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சம்பளமாக ரூ.37,54,405 செலுத்தியுள்ளன என்பது கண்டறியப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் பூனம் திக்ஷித் இரண்டு அலுவலகங்களுக்கும் ஒரு நாளும் சென்றதில்லை.
ஆனால், பூனம் திக்ஷித் வேலைக்கு சென்றதாக கணக்கு காட்டப்பட்ட போலி வருகைப் பதிவேட்டுக்கு, அவரது கணவர் பிரதியுமான் திக்ஷித் ஒப்புதல் அளித்துள்ளார். இவர் மீது ராஜஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.