பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக எதிர்க்கட்சியான மகா கூட்டணியின் கூட்டு தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட 25 அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி மகா கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் விளம்பரத் துறையின் தலைவர் பவன் கெரா, விஐபி கட்சியின் தலைவரும், துணை முதல்வர் வேட்பாளருமான முகேஷ் சஹானி, சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த அறிக்கையில் 25 அம்ச வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஐடி பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பால் சார்ந்த தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடர்பான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்:
> மகா கூட்டணி அரசு அமைக்கப்பட்ட 20 நாட்களுக்குள், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்யும் சட்டம் கொண்டு வரப்படும். 20 மாதங்களுக்குள் அரசு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான செயல்முறையைத் தொடங்கும்.
> அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
> பெண்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், டிசம்பர் 1 முதல் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.
> ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
> பிஹாரில் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கள் மீதான தடையை நீக்கப்படும்
> சமூக நல தொழிலாளர்களாக பணிபுரியும் மகளிர் சுய உதவி குழுவினர் (ஜீவிகா தீதி) பணியிடங்கள் பணி நிரந்தரம் செய்யப்படும். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 ஊதியம் வழங்கப்படும். அவர்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களிடம் எந்த வட்டியும் வசூலிக்கப்படாது.
> அனைத்து ஒப்பந்த அல்லது அவுட்சோர்ஸ் தொழிலாளர்களும் நிரந்தர ஊழியர்களாக மாற்றப்படுவார்கள்.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி, பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.