Dude: "காஞ்சனா-வில் சரத்குமார் ஃபேன்; மாரி 2-வில் தனுஷ் ஃபேன்" – வைரல் காஷ்மீர் பெண் ஐஸ்வர்யா பேட்டி

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரைக்கு வந்திருக்கிறது ‘டியூட்’ திரைப்படம்.

இளைஞர்களை மையமாக வைத்து நகரும் கதை என்பதால் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் இளம் நடிகர்கள் பலரும் களமிறங்கி கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில், படத்தில் குறைவான காட்சிகளில் வந்திருந்தாலும் பலருடைய ஹார்ட்டின்களைப் பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா ஷர்மா.

Dude Movie
Dude Movie

டிக் டாக் இருந்த காலத்தில் பிரபலமாக இருந்த ஐஸ்வர்யா ஷர்மா, கடந்தாண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியிருந்தார்.

இப்போது தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் ஐஸ்வர்யாவின் நடன ரீல்ஸ்தான் இப்போது சமூக வலைத்தளப் பக்கங்களில் டாப் டாக்!

`டியூட்’ படத்திற்கு விஷ் சொல்லி, அவரைப் பேட்டிக் கண்டோம்.

உற்சாகத்துடன் பேசத் தொடங்கிய ஐஸ்வர்யா ஷர்மா, “‘டியூட்’ படத்தில் வரும் என்னுடைய கதாபாத்திரத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்னுடைய சாம் கேரக்டருக்குப் பல மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார்கள். நகைச்சுவையூட்டும் அந்தப் பதிவுகளையெல்லாம் பார்க்கும்போது நெகிழ்வாக இருக்கிறது.

2019-ல் நான் ‘PUBG’ கேமை மையமாக வைத்து ஒரு வீடியோவில் நடித்திருப்பேன்.

Aishwarya Sharma - Dude
Aishwarya Sharma – Dude

அந்த வீடியோ அப்போது பெரும் வைரலானது. இத்தனை வருடங்கள் ஆனப் பிறகும் என்னை மக்கள் நினைவில் வைத்து அடையாளப்படுத்துகிறார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் என்னைத் தொடர்புக் கொண்டார்கள். அவர்கள் மூலமாகதான் நான் `டியூட்’ படத்திற்குள் வந்தேன்.

பிறகு சென்னைக்கு வந்து இயக்குநர் கீர்த்தீஸ்வரனைச் சந்தித்தேன். ஆடிஷனுக்காக முதலில் ஒரு நீள தமிழ் வசனத்தைக் கொடுத்திருந்தார்கள்.

எனக்கு தமிழ் தெரியாது. ஆடிஷனுக்கு எனக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை நிச்சயமாக என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால், பயிற்சி எடுத்து அதைச் செய்து முடிக்க கொஞ்சம் அவகாசம் எடுக்கும். பிறகு, இயக்குநரிடம், ‘முதலில் இந்தியில் பேசுகிறேன். அதில் என்னுடைய நடிப்பைப் பாருங்கள். பிறகு தமிழில் பேசுகிறேன்’ எனக் கேட்டு ஆடிஷன் செய்தேன்.

எனக்கு இந்தப் படத்தின் சாம் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. சிறிய கேரக்டராக இருந்தாலும் நான் நிச்சயமாக நடித்தாக வேண்டும் என விரும்பினேன். ஏனெனில், என்னுடைய கதாபாத்திரத்தை நான் சிறப்பு தோற்றமாகத்தான் பார்க்கிறேன்.

நான் படத்தில் மூன்று காட்சிகளில் மட்டும் வந்தாலும் அது பார்வையாளர்களிடையே தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது. அதுதான் இந்தக் கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்து நடித்ததற்குக் காரணம்” எனப் புன்னகைக்கிறார்.

Aishwarya Sharma - Dude
Aishwarya Sharma – Dude

“படப்பிடிப்பு தளம் எப்போதுமே ஜாலியாக இருக்கும். நாங்கள் அனைவரும் இணைந்து சில மைன்ட் கேம்ஸ் விளையாடுவோம். டென்ஷன் என்பதே இருக்காது.

எப்போதுமே ஜாலியாக இருப்போம். பிரதீப் சாரும் மமிதாவும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். மமிதா எனக்கு இன்னும் நெருக்கம் எனச் சொல்லலாம்.

அவருடைய அரவணைப்பு எனக்கு வீட்டில் இருப்பதுபோன்ற நிதானமான உணர்வைத் தரும். நான் சிறுவயதிலிருந்தே சரத்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகை. `காஞ்சனா’ படத்தில் வரும் அவருடைய கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்துதான் நான் அவருக்கு ஃபேன் ஆகினேன். அதுபோல, டிராவிட் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் எனக்கு ரிலாக்ஸாக இருக்கும். அவர்தான் என்னுடைய நெருங்கிய நண்பர்.

டிராவிட்டை முதன்முதலாகப் பார்க்கும்போது அவரை நான் அதற்கு முன் எங்கேயோ பார்த்தது போன்ற உணர்வைத் தந்தது. பிறகுதான், அவருடைய யூட்யூப் வீடியோக்கள் என் நினைவுக்கு வந்தன. `ஊறும் ப்ளட்’ பாடலை நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் பிராக்டீஸ் செய்தோம்.

முதலில் எனக்கு அந்தப் பாடலின் நடனம் கொஞ்சம் கடினமாக இருந்தது. பிறகுதான், பிரதீப் சாருக்கும் அது கடினமாக இருந்ததாக அவர் சொன்னார்” என்றவர், “நான் ஜம்மு & காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவள். அங்கு என்னுடைய தந்தை தியேட்டர் நடத்தி வந்தார். எங்கள் வீட்டில் எப்போதுமே கேமராவும் இருக்கும். அதன் மூலமாகத்தான் எனக்கு சினிமா ஆர்வம் வந்தது.

Aishwarya Sharma - Dude
Aishwarya Sharma – Dude

அங்கிருந்து டிக் டாக், ரீல்ஸ் என இப்போது சினிமா வரை வந்திருக்கிறேன். சினிமாவைப் பொறுத்தமட்டில் எனக்கு தனுஷ்தான் பேவரிட்.

என்னை முன்பிருந்து சோசியல் மீடியா பக்கங்களில் பின்தொடர்பவர்களுக்கு அது தெரியும். ‘மாரி 2’ திரைப்படம் பார்த்து நான் அவருக்கு ரசிகையானேன். அவருடைய ‘அம்பிகாபதி’ திரைப்படமும் எனக்கு க்ளோஸான திரைப்படம்.

சிறுவயதிலிருந்தே நான் தமிழ் சினிமாவோடு நெருக்கமாக இருந்திருக்கிறேன். முக்கியமான தமிழ் படங்கள் அத்தனையையும் இந்தி டப்பிங்கில் பார்த்துவிடுவேன்” என்றபடி முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.