SIR-க்கு கேரளா எதிர்ப்பு | தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு எதிரானது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜனநாயக செயல்முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக்.27) அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பினராயி விஜயன், “கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு, ஜனநாயக செயல்முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால். புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்தாமல், 2002-2004 வரையிலான வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு திவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

1950 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1960 வாக்காளர் பதிவு விதிகள் ஆகியவற்றின்படி, தற்போதைய பட்டியலை அடிப்படையாகக் கொண்டே எந்த ஒரு வாக்காளர் பட்டியல் திருத்தமும் மேற்கொள்ளப்பட வேண்டும். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் செய்வது நடைமுறைக்கு ஏற்றதல்ல. இதை மாநில தேர்தல் அதிகாரி தெளிவாகக் கூறி இருந்த போதிலும், சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தின் மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வாக்களிப்பதைப் போன்று வேறில்லை; நான் நிச்சயமாக வாக்களிப்பேன் என்பதுதான் 2024-ம் ஆண்டின் தேசிய வாக்காளர் தின செய்தி. இந்த முழக்கத்தை ஊக்குவித்தவர்களே, அதற்கு முரணாக பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினார்கள். வயது வந்தோருக்கான வாக்குரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பின் பிரிவு 326-ஐ இந்த செயல் கடுமையாக மீறுகிறது. அரசியல் வசதிக்காக குடிமக்களின் வாக்களிக்கும் அடிப்படை உரிமையை சிதைக்கவோ அல்லது பறிக்கவோ முடியாது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டை மறைமுகமாக செயல்படுத்துவதற்கான முயற்சி என்ற கவலை அதிகரித்து வருகிறது. மத்தியில் உள்ள ஆளும் சக்திகள் எஸ்ஐஆர் செயல்முறையைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை தங்களுக்கு சாதகமாக கையாளுகின்றன என்ற விமர்சனம் இன்னமும் உள்ளது.

பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. ஆனால், அதே செயல்முறையை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவது குற்றமற்றது என்றோ நடுநிலையானது என்றோ பார்க்கப்பட மாட்டாது. விரிவான தயாரிப்பு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய இவ்வளவு பெரிய திருத்தத்தை, அவசரமாக நடத்துவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி.

தனது நம்பகத்தன்மையை குறைக்கும் முடிவுகளில் இருந்து தேர்தல் ஆணையம் விலகி இருக்க வேண்டும். மத்தியில் ஆட்சியில் உள்ள சக்திகள், தேர்தல் ஆணையத்தை ஆளும் கட்சிக்கான கருவி என்பதாக குறை மதிப்புக்கு உள்ளாக்கக்கூடாது. எஸ்ஐஆர் செயல்முறைக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் ஒன்றுபட்டு இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.