Cybercrime : இந்தியா இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிவேக பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கும் அதேநேரத்தில், அதனை வைத்து மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு பெண்களையும், ஆன்லைன் மோசடிகளில் பாதிக்கப்படுபவர்களையும் பாதுகாக்க சிறப்புச் சட்டங்களையும், விழிப்புணர்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் சைபர் மோசடிகளுக்கு எதிராக நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், எப்படி புகார் அளிப்பது, மோசடி செய்பவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்….
Add Zee News as a Preferred Source
சைபர் வெளியைப் பாதுகாப்பு முக்கிய சட்டங்கள்
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000: இது இந்தியாவின் சைபர் சட்டத்தின் அடித்தளம் ஆகும். அடையாளத் திருட்டு, ஆள்மாறாட்டம், மோசடி மற்றும் ஆபாசமான/தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பரப்புதல் போன்ற குற்றங்களை இது கையாளுகிறது. நிதி மோசடி செய்பவர்களைத் தண்டிக்கவும், தீங்கிழைக்கும் இணையதளங்கள் மற்றும் செயலிகளைத் தடுக்கவும் இது அதிகாரமளிக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021: இது சமூக ஊடக இடைத்தரகர்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஆன்லைன் சந்தைகளின் பொறுப்புணர்வை உறுதி செய்கிறது. இது AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாட்டை நிவர்த்தி செய்வதுடன், சட்டவிரோத உள்ளடக்கத்தை தளங்களில் இருந்து அகற்றவும் கட்டாயப்படுத்துகிறது.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023: அனைத்து தனிப்பட்ட தரவுகளும் சட்டப்படி மற்றும் பயனரின் சம்மதத்துடன் கையாளப்படுவதை இது உறுதி செய்கிறது. மத்திய அரசு, அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 9.42 இலட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகளும், 2,63,348 ஐஎம்இஐ (IMEI) எண்களும் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.
இந்தியக் கணினி அவசரகாலப் பதிலளிப்புக் குழு (CERT-In): சைபர் பாதுகாப்பிற்குப் பதிலளிக்கும் தேசிய நிறுவனம் இது. இது சைபர் அச்சுறுத்தல்களைக் கண்காணித்து, பாதிப்புகளைக் கண்டறிந்து, தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது. தரவு மீறல்கள் அல்லது ஃபிஷிங் தாக்குதல்கள் போன்ற சம்பவங்களின்போது, அபாயங்களைத் தணிக்கவும், பாதிப்பைக் குறைக்கவும் உடனடியாக எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. மார்ச் 2025 நிலவரப்படி, CERT-In பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,438 நிறுவனங்களை ஈடுபடுத்தி 109 சைபர் பாதுகாப்பு பயிற்சிகளை (Mock Drills) நடத்தியுள்ளது.
தேசிய முக்கிய தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் (NCIIPC): இது வங்கி, தொலைத்தொடர்பு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து போன்ற தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான தேசிய நோடல் நிறுவனம் ஆகும்.
சட்டம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C): உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த மையம், சைபர் குற்றங்களைச் சீரான முறையில் கையாள சட்ட அமலாக்க முகமைகளுக்கு (LEAs) உதவுகிறது. இது நிஜ நேரத் தகவல் பகிர்வு மற்றும் ஒருங்கிணைந்த விசாரணைகளை எளிதாக்குகிறது. சைபர் மோசடிகளுடன் தொடர்புடைய 3,962 ஸ்கைப் ஐடிகளும் 83,668 வாட்ஸ்அப் கணக்குகளும் I4C ஆல் முடக்கப்பட்டுள்ளன.
CFCFRMS: இதன் மூலம் நிதி நிறுவனங்கள் 17.82 இலட்சம் புகார்களில் ரூ. 5,489 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடிக்கு உள்ளாகாமல் காப்பாற்றியுள்ளன.
சமன்வயா தளம்: இந்தத் தளம் மோசடிகளை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு உதவுகிறது. இதன் ‘பிரதிபிம்ப்’ தொகுதி குற்றவாளிகள் மற்றும் குற்றச் செயலுக்கான உள்கட்டமைப்பின் இருப்பிடத்தை வரைபடமாக்குகிறது. இது இதுவரை 12,987 குற்றவாளிகளைக் கைது செய்ய வழிவகுத்துள்ளது.
சஹ்யோக் போர்ட்டல்: இது சட்டவிரோதமான ஆன்லைன் கன்டென்டுகளை அகற்ற இடைத்தரகர்களுக்கு தானியங்கி அறிவிப்புகளை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த தளம் ஆகும். இது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு எதிராக விரைவான நடவடிக்கையை உறுதி செய்கிறது.
பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு
தேசிய சைபர் குற்றப் புகாரளிக்கும் போர்ட்டல் (www.cybercrime.gov.in): பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்காகக் கொண்ட குற்றங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, குடிமக்கள் பல்வேறு சைபர் குற்றங்களைப் புகாரளிக்க இந்த இணையதளம் உதவுகிறது.
சைபர் கிரைம் உதவி எண் 1930: ஆன்லைன் நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்குகிறது. மோசடியான பரிவர்த்தனைகளைப் புகாரளிக்கவும், முடிந்தால், முடக்கவும் இது உதவுகிறது.
இந்த ஒருங்கிணைந்த சட்டங்கள், அமைப்புகள் மற்றும் முயற்சிகள் மூலம், இந்தியா தனது டிஜிட்டல் பயணத்தைப் பாதுகாப்பானதாகவும், பொறுப்புணர்வு மிக்கதாகவும் மாற்றுவதை உறுதி செய்கிறது.
About the Author
S.Karthikeyan