`குண்டர் சட்டம் பாய்ந்தது!' – பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்; ஓராண்டு சிறைக்காவல்

ந்திராவைச் சேர்ந்த திருமணம் ஆகாத 25 வயது இளம் பெண் தன்னுடைய வளர்ப்புத் தாயிடம், `திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் சென்று வழிபட வேண்டும்’ என்று சொல்ல, தாயும் மகளும் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி இரவு, ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்குக் கிளம்பியிருக்கிறார்கள். நெல்லூரிலிருந்து வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு, திருவண்ணாமலை கீழ் அணைக்கரைப் பகுதியிலிருக்கும் மொத்த வியாபாரக் காய்கறி மார்க்கெட்டுக்குப் புறப்பட்ட மினி லாரியில் அவர்கள் பயணித்திருக்கின்றனர். அந்த வளர்ப்புத் தாயின் தம்பிதான் லாரியை ஓட்டி வந்திருக்கிறார். செப்.30-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில், திருவண்ணாமலைக்குள் லாரி என்ட்ரியான பிறகு, அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராததெல்லாம் நடந்துவிட்டன.

சுந்தர்
சுந்தர்

திருவண்ணாமலை ஏந்தல் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் இருவரும் வாகனத்தை மடக்கி விசாரித்திருக்கின்றனர். `லேடீஸ் ரெண்டு பேரையும் கோயிலுக்குப் பக்கத்துல இறக்கிவிட்டுட்டு போயிடுவேன் சார். இருட்டு நேரம், தனியாவிட முடியாது…’ என்று ஓட்டுநர் கூறியிருக்கிறார். `லோடு வண்டியெல்லாம் இப்படிப் போகக்கூடாது. இவங்க ரெண்டு பேரையும் நாங்க கொண்டுபோய் கோயில் பக்கம் விடுறோம்… நீ கிளம்பு’ என்று காவலர்கள் இருவரும் கூறியிருக்கின்றனர். காவலர்கள் இருவருமே காக்கிச் சீருடையில் இருந்ததால், அவர்கள்மீதான நம்பிக்கையில் தாயும் மகளும் லாரியிலிருந்து இறங்கியிருக்கிறார்கள்.

மார்க்கெட்டை நோக்கி லாரி கிளம்பியதும், காக்கிகள் இருவரும் தங்களின் பைக்குகளில் அம்மாவையும் மகளையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருக்கின்றனர். கோயிலை நோக்கிச் செல்லாமல், ஏந்தல் சாலையில் பயணமாகியிருக்கிறது காவலர்களின் பைக்குகள். தாய்க்கும் மகளுக்கும் தெலுங்கு மொழி மட்டுமே தெரியும் என்பதால், காவலர்கள் பேசிக்கொண்டதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. `எப்படியும் கோயிலுக்குப் பக்கத்துல கொண்டுபோய் விட்டுடுவாங்க…’ என்று நம்பியிருக்கின்றனர்.

சுரேஷ் ராஜ்

ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரம் வரை சென்றதும், பைக்கை நிறுத்திவிட்டு, தாயைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, புதரில் தள்ளிவிட்ட காவலர்கள் சுரேஷ் ராஜும் சுந்தரும், இளம்பெண்ணை மட்டும் தரதரவென இழுத்துக்கொண்டு மறைவான பகுதிக்குள் சென்றிருக்கின்றனர். அங்கு வைத்து, அந்தப் பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்த காவல்துறை மேலிடம், அடுத்த மூன்று நாள்களில் அவர்களை `டிஸ்மிஸ்’ செய்தது. இந்த நிலையில், வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் காவலர்கள் இருவர் மீதும் இன்றைய தினம் `குண்டர்’ சட்டம் பாய்ந்திருக்கிறது. இதனால், இருக் காவலர்களின் சிறைக்காவல் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.