இந்தியாவில் அறிமுகமாகிறது டிரைவர் இல்லாத கார்!

பெங்களூரு,

தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பது போல், ஏ.டி.எம். இட்லி கடை, ஓட்டல்களில் உணவு பரிமாறும் ரோபோ, தோசை சுடும் ரோபோ, வீட்டு வேலைகளுக்கு ரோபோ பயன்பாடு என பெங்களூரு இன்றைய வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை கட்டமைத்து வருகிறது என்றால் மிகையல்ல.

அந்த வரிசையில் தற்போது டிரைவர் இல்லாத கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம் பெங்களூருவில் உள்ள விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்கள் அடங்கிய குழுவினர் தான் இந்த டிரைவர் இல்லாத தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர்.

இந்த கார் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கார் தயாரித்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் நடைபெற்றது.

குறிப்பாக குறுகலான சாலையில் எப்படி இயங்கும்?, சாலைகளின் குறுக்கே நாய்கள், ஆடு, மாடுகள் வந்தால் எப்படி இயங்கும்?, வாகனங்களுக்கு வழிவிடுவது உள்பட பல்வேறு கட்ட சோதனை செய்து, அதற்கு ஏற்ப இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கார் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த டிரைவர் இல்லாத காரின் அறிமுக நிகழ்ச்சி அந்த என்ஜினீயரிங் கல்லூரியில் சமீபத்தில் நடந்தது. இதனை உத்தராதி மடத்தின் சத்யாத்ம தீர்த்த சுவாமி அறிமுகப்படுத்தினார். பின்னர் அந்த காரில் மடாதிபதி, முக்கிய பிரமுகர்கள் கல்லூரி வளாகத்திலேயே பயணித்தனர். இந்த கார் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் டிரைவர் இல்லாத கார் என கூறப்படுகிறது.

தற்போது அந்த கார் மற்றும் காரில் மடாதிபதி உள்ளிட்டோர் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காரின் பிரமாண்ட தோற்றத்தை பார்த்து பொதுமக்கள் பலரும் வியந்து வருகிறார்கள்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.