இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. சமீபத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டி நேற்று (அக்டோபர் 29) முடிவடைந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.
Add Zee News as a Preferred Source
முதல் போட்டி ரத்து
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிக்ஸர்களை பறக்கவிட்டார். மறுபுறம் சுப்மன் கில்லும் சிறப்பாக விளையாடினார். இந்திய அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை விடாமல் பெய்த நிலையில், போட்டியானது ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில், இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (அக்டோபர் 31) மெல்போர்ண் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
2வது போட்டியில் மழை குறுக்கிடுமா?
இந்த நிலையில், இப்போட்டியில் மழை குறுக்கிடாமல் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், டி20 தொடரை கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நோக்குடன் விளையாடி வருகின்றனர். ரசிகர்களும் அதே வெறியுடன் போட்டிகளை பார்த்து வருகின்றனர். ஆனால் டி20 தொடரின் முதல் போட்டியிலேயே மழை குறுக்கிட்டு போட்டி ரத்தானதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். இதனால் இரண்டாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், நாளைய போட்டியில் மழை குறுக்கிடுமா? வானிலை ரிப்போர்ட் கூறுவது என்ன? அந்நாட்டின் வானிலை முன்னறிவிப்பின்படி, மெல்போர்னில் நாளை மழைப்பொழிவு ஏற்பட 55% வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே நாளைய போட்டியில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா: MCG-யில் நேருக்கு நேர்
MCG-யில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக விளையாடியதில்லை. அனைத்து வடிவங்களிலும், அவர்கள் இந்த மைதானத்தில் 14 போட்டிகளில் வெறும் நான்கு முறை மட்டுமே வென்றுள்ளனர்.ஆஸ்திரேலியா ஏழு முறை வென்றுள்ளது, மூன்று போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. டி20 போட்டிகளை மட்டும் கருத்தில் கொண்டால், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் எம்சிஜியில் நான்கு முறை மோதியுள்ளன, 2008 ஆம் ஆண்டு முதல், அதில் இந்தியா இரண்டில் வென்றுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள்
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், க்ளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (வீக்கிங் கீப்பர்), மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னி.
About the Author
R Balaji