காசா,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், சிலர் பணய கைதிகளாக சிறை பிடித்தும் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
இதன்பின்னர், அமெரிக்கா தலைமையில் நடந்த மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் பலன் ஏற்பட்டது. இதனால், ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால், காசா மக்கள் சொந்த ஊருக்கு திரும்பும் ஆவலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே விதிமீறலில் ஈடுபட்டு, இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பு படுகொலை செய்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 253 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதில் குடியிருப்புகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. காசா முனையிலுள்ள கூடாரங்கள், நிவாரண மையங்கள் ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால், காசாவுக்கு திரும்பி வந்த பொதுமக்களிடையே அச்சமும், பதற்றமும் தொற்றி கொண்டது. குண்டுவீச்சு தாக்குதலில் பலர் காயமடைந்து உள்ளனர். ஆனால், மருத்துவமனைகளில் போதிய மருந்து பொருட்கள் இருப்பு இல்லாத நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 10-ந்தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்று கொள்ளப்பட்டது. எனினும், இதன் பின்னர் இஸ்ரேலின் தாக்குதலில் 211 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 597 பேர் காயமடைந்து உள்ளனர். இதனால், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 68 ஆயிரத்திற்கும் கூடுதலாக அதிகரித்து உள்ளது. 1.70 லட்சம் பேர் காயமடைந்து உள்ளனர்.