நெல்லை,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் இசக்கிபாண்டியன். வழக்கறிஞரான இவர், சில தினங்களுக்கு முன்பு தனது காதலியை கோவையில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டார். பின்னர் காதல் ஜோடிகள் இருவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதற்கிடையில், இவர்களின் திருமணத்தை பதிவு செய்ய கோவை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி கிடைக்காத நிலையில், சொந்த ஊரான பாளையங்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக இருவரும் வந்திருந்தனர். அப்போது இருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 3 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, போலிசார் பெண் மற்றும் மாப்பிளை வீட்டைச் சேர்ந்த இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தால் பாளையங்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.